வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியை ரயில்வே திணைக்களம் கடந்த மாதம் 5ஆம் திகதி தண்டவாளம் போட்டு தடை செய்துள்ளதால் அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவ மற்றும் இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக முத்துமாரி அம்மன் ஆலய குருக்கள் தெரிவித்துள்ளார்.

ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதியைக் கடந்து 35ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தினமும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் கடந்த வருடம் 4பேர் பயணம் மேற்கொண்ட  கார் ரயிலில் மோதுண்டு மூவர் உயிரிழந்துள்ளனர். எனினும் கடந்த 9 மாதங்களாக அப்பகுதியில் பாதுகாப்பு வேலி அமைத்துக்கொடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வந்தனர். 

இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி இறம்பைக்குளம் ஆலயத்தின் நிதிப்பங்களிப்புடன் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. மார்ச் மாதம் 5ஆம் திகதி மக்களின் பயன்பாட்டிலிருந்த அம்பாள் வீதிக்கு தண்டவாளம் இட்டு தடை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் பாதுகாப்பு வேலியையும் அகற்றுமாறு ரயில்வே திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது இவ்விடயம் குறித்து ஓமந்தை பொலிஸார் கவனத்திற்குக் கொண்டு சென்று கலந்துரையாடல் மேற்கொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் கவனத்திற்குக் கொண்டு சென்று கலந்துரையாடல் மேற்கொண்டு அரசாங்க அதிபர் அப்பாதையை திறப்பதற்கும் ரயில்க் கடவையில் காவலாளியை நிறுத்துமாறும் ரயில்த் திணைக்களத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார். 

எனினும் இன்று ஒரு மாதம் கடந்த நிலையிலும் அம்பாள் வீதிக்கு ஏற்படுத்தப்பட்ட தடை நீக்கப்படவில்லை. 

இவ்விடயத்தினை கிராம அபிவிருத்திச்சங்கம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையினையும் முன்னெடுத்து வருகின்றது. 

மக்களின் போக்குவரத்து சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதுடன் ஒரு மாதகாலமாக மக்களின் பாவனையிலிருந்த வீதிக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது இதனால் மக்களின் போக்குவரத்து சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றது. 

இப்பாதை தடை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் நோயாளர்கள் எனப் பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.