(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நுண்கடன் திட்டம் ராஜபக்ஷ காலத்தில் கறுப்பு பணத்தை சுத்திகரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

நுண்கடன் திட்டம் ராஜபக்ஷ அரசாங்க காலத்திலே ஏற்படுத்தப்பட்டது. அதனை சம்பூரணமாக ஏற்படுத்தியது முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன்.

குறித்த நுண்கடன் நிறுவனங்கள் வைத்திருப்பவர்களில் 80வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடந்த அரசாங்கத்துடன் தொடர்புப்பட்டவர்களாகும். அதேபோன்று நுண்கடன் நிறுவனம் கடந்த அரசாங்கத்தில் கறுப்பு பணத்தை சுத்திகரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகும்.

இதுதொடர்பான முழு அறிக்கையை எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன். அத்துடன் நுண்கடன் முறையை சிறந்த முறையில் கொண்டுசெல்ல கடன் ஒழுங்குபடுத்தல் சபை ஒன்றை ஏற்படுத்துவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளோம் என்றார். 

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் நிலையியற்கட்டளை 27/2ன் கீழ் இன்று பாராளுமன்றத்தில் நுண்கடன் அதிகரிக்கப்படுவது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். 

நுண்கடன் திட்டம் 2014ஆம் ஆண்டு சுனாமிக்கு பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. சுனாமி பேரழிவுக்கு பின்னர் எமது நாட்டுக்கு பல நாடுகளில் இருந்தும் 13 பில்லியன் டொலர்கள்வரை நன்கொடையாக வந்து சேர்ந்தது. என்றாலும் அந்த நன்கொடைகளை அதிகமானவர்கள் தங்களின் சொந்த கணக்குகளுக்கு திருப்பிக்கொண்டனர். இந்த சுனாமி நிதியே நுண்கடன் பிரச்சினைக்கு பிரதான காரணம் என மத்திய வங்கி தெரிவிக்கின்றது.

மேலும் சுனாமிக்கு பின்னர் தேசிய அபிவிருத்தி நிதியம் என அமைத்துக்கொண்டு நுண்கடன் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு என்ன நடந்தது என்று தெரியாது. அதுதொடர்பில் நாங்களும் தேடிக்கொண்டிருக்கின்றோம்.

அத்துடன் நுண்கடன் வழங்கும்போது 35 வீதத்துக்கு அதிக வட்டி பெறமுடியாது என்ற வரையறையொன்றை நாங்கள் ஏற்படுத்தினோம். சில பெண்கள் நூற்றுக்கு 200வீதத்துக்கும் கடன் பெற்றிருந்தனர். அதனை செலுத்தமுடியாமல் தற்கொலை செய்துகொண்டும் இருந்தனர். குறிப்பாக வடக்கில் அதிகமான இளம் விதவைப்பெண்கள் இதனால் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகியுள்ளனர். தற்போதும் ஆளாகி வருவதாக கேள்விப்படுகின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.