உலகிலேயே முதல் முறையாக நாடு முழுவதும் 5 - ஜி அதிவேக இணைய சேவையை தென்கொரியா வழங்கத் தொடங்கியுள்ளது. 

தென் கொரியாவில் நாடு தழுவிய அளவில் 5 - ஜி அதிவேக இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை ஏப்ரல் 5 ஆம் திகதி தொடங்குவதாக முதலில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாள் முன்னதாக கடந்த புதன்கிழமை 3 ஆம் திகதி இரவு 11 மணிக்கு சேவை தொடங்கப்பட்டுவிட்டது.

உலகிலேயே மிக அதிவேக இணையச் சேவையை தொடங்கியிருக்கும் முதலாவது நாடு தென் கொரியா எனக் கருத்தப்படுகிறது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே, முதன் முதலாக அதிவேக இணையச் சேவையை தொடங்குவது யார் என்ற போட்டி நிலவியது.

இந்நிலையில் தென்கொரியாவில், தொலைத்தொடர்புத்துறையில் முன்னணியில் இருக்கும் எஸ்.கே.டெலிகாம், கேடி மற்றும் எல்ஜி யு-பிளஸ் ஆகியவை இச்சேவையை தொடங்கியுள்ளன.

வெள்ளிக்கிழமை அன்று அங்கு 5 - ஜி சேவைகள் தொடங்கப்பட இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில்  நேற்றிரவே, தென்கொரியா நாடு முழுவதும் 5 - ஜி சேவை தொடங்கி வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 

5 - G தொலைத்தொடர்புக் கட்டமைப்பு என்றால் என்ன?

பல கருவிகள் கைத்தெலைபேசி இணையக் கட்டமைப்பைத் தடையின்றி விரைவாகப் பயன்படுத்த வகை செய்யும் ஒரு கட்டமைப்பு ஆகும்.

5 - G தொலைத்தொடர்புக் கட்டமைப்பில் என்ன செய்யலாம்?

 • தகவல்களை வேகமாகப் பதிவேற்றம் செய்யலாம். பதிவிறக்கம்  செய்யலாம்.
 • தானியக்க வாகனங்கள் வேகமாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
 • கைத்தெலைபேசியில் மெய்நிகர்/ மிகைமெய் நிகர் (augmented reality / virtual reality) தொழில்நுட்பக் காணொளிகளை உயர்தரத்தில் பார்க்கலாம்.
 • இணைப்பு துண்டிக்கப்படாமல் நிலையாக இருக்கும்.
 • சேவையைப் பரவலாகப் பயன்படுத்தமுடியும்.

இதில் என்ன சாத்தியமாகலாம்?

 • ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடலாம்.
 • ஓட்டுநரில்லா வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளலாம்.
 • கருவிகளால் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தலாம்.
 • ஆளில்லா பல இயந்திரங்கள் சாத்தியமாகலாம்.
 • துல்லியமான காணொளி அழைப்புகள் கிடைக்கலாம்.
 • உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
 • அவசர உதவி அழைப்புகள் ஒரு பொத்தான் மூலம் நேரடியாக வைத்தியசாலைக்கு செல்லலாம்.
 • கண்ணாடிகளையும் சுவர்களையும் தொட்டு பலவற்றைத் தெரிந்து கொள்வது சாத்தியமாகலாம்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் . எனின் 5 ஜி அதிவேக இணைய சேவையில் சில தீமைகளும் உள்ளன.

 • ஒருவேளை,  பழைய சாதனங்களுக்கு 5G க்கு தகுதியற்றதாக இருக்கும் எனவே, புதிய சாதனங்களை வாங்க வேண்டும்.
 • உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அதிக செலவு ஏற்படும்
 • பாதுகாப்பு மற்றும் அந்தரங்க தகவல்களில் பிரச்சினைகள் ஏற்படும்.