இலங்கையில் திரவப் பெற்றோலிய வாயு இறக்குமதியில் ஈடுபடும் மாபெரும் நிறுவனமான லிட்ரோ காஸ், இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்துக்கு இந்த ஆண்டுக்கான நிறுவனசார் அனுசரணையாளராக செயற்படுவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்நிகழ்வு லிட்ரோ காஸ் பிரதான அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. 

இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட அதிகாரிகள் மத்தியில் இந்த உடன்படிக்கை கைமாறப்பட்டிருந்தது.

லிட்ரோ காஸ் மற்றும் SLIM ஆகியவற்றுக்கிடையிலாக ஒன்றிணைவு என்பது சந்தைப்படுத்தல் துறையில் பல வாய்ப்புகளை ற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வர்த்தக நாமச் சிறப்புகள், Effie விருதுகள், மக்கள் தெரிவு விருதுகள், NASCO, Marketing Roks மற்றும் Gamata Marketing போன்ற தேசிய மட்டத்தில் புகழ்பெற்ற நிகழ்வுகளிலும் கைகோர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

“இலங்கையின் சந்தைப்படுத்தல் துறையுடன் இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்துடனான பங்காண்மை ஊடாக கைகோர்த்துள்ளமையையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். எமது விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளை மேலும் முன்நோக்கி கொண்டு செல்வதற்கு நாம் திட்டமிட்டுள்ளதுடன், எமது வர்த்தக நாமங்களை ஒன்றிணைத்து, நாடு முழுவதும் உறுதியான சமூகங்களை கட்டியெழுப்பவும் திட்டமிட்டுள்ளோம்” என லிட்ரோ காஸ் லங்கா லிமிட்டெட் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சமிந்த எதிரிவிக்ரம தெரிவித்தார்.

இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் சந்தைப்படுத்தல் துறையில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவித்து அவர்களிடையே தகைமைகளை விருத்தி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. 

இந்தச் செயற்பாடுகள் பெருமளவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இக்கல்வியகத்தினூடாக வழங்கப்படும் மூன்றாம் தரப்பு சந்தைப்படுத்தல் தகைமைகளின் மூலம் மாணவர்கள் மற்றும் தேசத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

இக்கல்வியகம் வருடாந்தம் 4000 தகைமை வாய்ந்த சந்தைப்படுத்தல் நிபுணர்களை வெவ்வேறு தகைமை மட்டத்தில் உருவாக்கி வருகிறது. இலங்கை சந்தைப்படுத்தல் துறையைச் சேர்ந்தவர்களின் காப்பகமாக இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகம் திகழ்கிறது. 

1970 ஆம் ஆண்டு இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. சந்தைப்படுத்தலுக்கான தேசிய அமைப்பு என்பதை உறுதி செய்யும் வகையிலும், இலாப நோக்கற்ற அமைப்பு எனும் வகையிலும் 1980 ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம் உறுதி செய்யப்பட்டிருந்தது. 

இலங்கையில் சந்தைப்படுத்தல் தொழிலை மேம்படுத்துவதற்கான பொறுப்பை இந்த அமைப்பு ஏற்றிருந்ததுடன், இதற்காக சந்தைப்படுத்தல் கற்கைகளை வழங்குவதுடன் தேசிய மட்டத்தில் நிகழ்ச்சிகள் மற்றும் செயற்திட்டங்களை முன்னெடுப்பதையும் மேற்கொள்கிறது. இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தை முகாமைத்துவ சம்மேளனம் மற்றும் நிறைவேற்றுச் சபை மேற்பார்வை செய்வதுடன், இதில் தலைவர் மற்றும் வெவ்வேறு துறைகளின் நிபுணர்கள்ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கையில் திரவ பெற்றோலிய வாயு விற்பனையிலும் சந்தைப்படுத்தலிலும் சந்தை முன்னோடியாக லிட்ரோ காஸ் லங்கா லிமிட்டெட் (LGLL) செயற்படுகிறது. இணை நிறுவனமான லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா பிரைவட் லிமிட்டெட் உடன் இணைந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. 

லிட்ரோ காஸ் வர்த்தக நாமத்தின உரிமையாண்மையை நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த தனது 5000 விற்பனை மையங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. 

பாதுகாப்பு நியமங்களைக் கடுமையாக பேணுவதற்காக லிட்ரோ காஸ் நன்மதிப்பைக் கொண்டுள்ளது. கம்பனியின் கொள்கையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக கருதப்படுகிறது.