(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய முன்னணியின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகின்றது. 

ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் அதே வேளையில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் 70 பேர் அணியும் ஜே .வி.பியும் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 23 பேரின் வாக்குகள் எந்தப்பக்கம் என்பது இன்று தீர்மானிக்கப்படும். 

இந்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை கடந்த ஆண்டு சமர்ப்பிக்க முடியாத நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடைக்கால வரவு செலவு திட்டம் ஒன்றினை அரசாங்கம் முன்வைத்தது. 

இவ் இடைக்கால கணக்கறிக்கையில் இந்த ஆண்டு  முதல் நான்கு மாதங்களுக்காக 1765 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதில் சேவைகளுக்காக 790 பில்லியன் ரூபாவும், திரட்டு நிதியத்துக்காக 970 பில்லிய் ரூபாவும், முற்பணங்களுக்காக 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்தன.  

அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் முழுமையான தீர்மானத்தில் கடந்த மார்ச் மாதம்  5ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்டது. 

அன்று தொடக்கம் ஒரு மாதகாலம் தொடர்ச்சியாக விவாதம் நடத்தப்பட்டதுடன் கடந்த மாதம் 28 ஆம் திகதி எதிர்கட்சியின் ஆதிக்கத்தில் மேல்மாகாண நகர அபிவிருத்தி மற்றும் மாநகர அமைச்சு, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு ஆகிய இரண்டு அமைச்சுக்கள் தோற்கடிக்கப்பட்டன. 

இம்முறை வரவு-செலவு திட்டத்தில்  445000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் கடன் பெறக்கூடிய தொகை 216000 கோடி ரூபாவாகும்.  இந்நிலையில் வரவு -செலவு திட்டத்தில் இறுதி வாக்கெடுப்பு இன்று நிதி அமைச்சின் விவாதத்தின் பின்னர் பிற்பகல் 5 மணிக்கு இடம்பெறும். 

இதில் வாக்களிப்பில் ஆளும் எதிர்கட்சிகள் எவ்வாறு வாக்களிக்கப்போகின்றது என்பது குறித்து கட்சிகள் தனித் தனியாக கூடி இன்றைய தினம் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளனர். 

மைத்திரி தரப்பு தடுமாற்றத்தில்

இந்நிலையில் வரவு-செலவு திட்டத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது குறித்து ஆராய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடி ஆராய்ந்தனர். 

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. எனினும் மஹிந்த தரப்பின் பிரதான நபர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தை ஆதரிப்பதில் இணக்கப்பாடு இல்லையென இதன்போது ஜனாதிபதி கூறியுள்ள போதிலும் கூட வரவு -செலவு திட்டத்தை எதிர்ப்போம் என்ற உறுதியான நிலைப்பாட்டினை எட்டவில்லை. 

ஆகவே மீண்டும் இன்று காலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக ஜனாதிபதியுடன் இணைந்துள்ள 23 பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் ஜனாதிபதி தலைமையில் கூடி தாம் வரவு -செலவு திட்டத்தில் என்ன செய்யப்போகின்றனர் என்ற இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மஹிந்த தரப்பு உறுதியான நிலைப்பாட்டில் 

எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மஹிந்த தரப்பினர் இந்த வரவு-செலவு திட்டத்தை எதிர்க்கும் உறுதியான நிலைபாட்டில் உள்ளனர். 

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் மஹிந்த ராஜபக்ஷவுடன் 70 உறுப்பினர்கள் இணைந்து செயற்பட்டு வருகின்ற நிலையில் அவர்கள் 70 பேரும் எதிர்த்து வாக்களிக்கவுள்ளனர். 

ஆனபோதிலும் இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர்  மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 70 பேர் அணியும் காலையில் சந்திப்பொன்றை நடத்தி வரவு-செலவு திட்டத்தை தோற்கடிக்கும் வியூகம் வகுக்கவுள்ளதாக அவ்வணி கூறுகின்றது. 

ஜே.வி.பி எதிர்க்கும்

அதேபோல் மக்கள் விடுதலை முன்னணியும் இந்த வரவு-செலவு திட்டத்தையும் வழமைபோலவே எதிர்த்தே வாக்களிக்கவுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த வரவு-செலவு திட்ட விவாதங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அதேபோல் இன்றைய  வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

கூட்டமைப்பு ஆதரிக்கும்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வரவு-செலவு திட்ட விவாதங்களில் அரசாங்கத்தின் கடந்த நான்கு  ஆண்டுகால வேலைத்திட்டங்களை கடுமையாக விமர்சித்தனர். 

இம்முறை வடக்குக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதித்தொகை குறித்து அரசாங்கதிற்கு நன்றிகளை கூறியிருந்த போதிலும்  நல்லாட்சியின் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் வடக்கின் அபிவிருத்தி குறித்து எந்த அக்கறையும் செலுத்தவில்லை என்பதையும் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாகவே சுட்டிக்காட்டினர். 

எனினும் இன்றைய தினம் அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டத்தை தாம் ஆதரிப்பதா என்பது குறித்து கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு கூடி ஆராய்ந்த பின்னரே தீர்மானம் எடுக்கும் என கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். 

எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த வரவு-செலவு திட்டத்தையும் ஆதரிக்கும் நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அரசாங்கதின் வேலைத்திட்டங்களை பெற்றுக்கொள்ள வரவு செலவு திட்டத்தை ஆதரித்தே ஆகவேண்டும் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடாக உள்ளதாகவும் கட்சியின் உள்ளக தகவல்களில் அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே இம்முறை வரவு-செலவு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஆதரிப்பார்கள் என்றே கூறப்படுகின்றது. 

எவ்வாறு இருப்பினும் ஐக்கிய தேசிய முன்னணியினரின் வாக்குகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழுமையான ஆதாரவுடன் இந்த வரவு-செலவு திட்டத்தை அரசாங்கம் வெற்றிகொள்ளும் என்றே அமைச்சர் ரவூப் ஹகீம், ஹபீர் ஹசீம், சஜித் பிரேமதாச உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.