2018ஆம் ஆண்டுக்கான உற்பத்தித்திறன் விருது விழா கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றதுடன், அதில் அமைச்சுகளுக்கிடையிலான உற்பத்தித்திறன் போட்டியில் ஜனாதிபதி செயலகம் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

ஜனாதிபதி செயலகம் வென்றெடுத்த அந்த விருது ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, முன்னாள் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஹன கீர்த்தி திசாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளினால் இன்று (04) ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியில் 2,000 க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் பங்குபற்றியதுடன், அங்கு அரச துறையின் நிறுவனம் சார்ந்த தலைமைத்துவம், சேவையை பெற்றுக்கொள்வோருடனான தொடர்பு, திட்டமிடல் மற்றும் உபாய மார்க்கங்கள், மனித வள செயற்பாடு, தகவல் மற்றும் அறிவு முகாமைத்துவம் ஆகியவை முக்கிய பெறுபேறுகளாக கருதப்பட்டது.

இந்த போட்டியில் ஜனாதிபதி செயலகம் பங்குபெறுவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேனவின் நேரடி தலைமைத்துவமும் ஆசிர்வாதமும் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த பணிக்குழாமினரின் தைரியமும் அர்ப்பணிப்பும் உற்பத்தித்திறன் பிரிவின் சரியான வழிகாட்டலும் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வருகின்ற காலங்களில் ஒட்டுமொத்த அரச துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதுடன், பேண்தகு சுபீட்சமிக்க இலங்கையை உருவாக்குவதற்கு தலைமைத்துவம் வழங்க ஜனாதிபதி செயலகம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற ஜனாதிபதி செயலக பணிக்குழாமினருடனான சினேகபூர்வ ஒன்றுகூடலில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள், அவர்களுடன் இணைந்து பாடலொன்றையும் பாடினார்.