தனவந்தர்களுக்கு நிவாரணம் வழங்கி சாதாரண மக்கள் மீது 'வற்' வரியை அதிகரிக்கும் அரசாங்கத்தி வரிக் கொள்கையை எதிர்க்க மக்கள் அணிதிரள வேண்டும் என முன்னிலை சோசலிஷ கட்சியின் பிரசாரச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார். மக்களை பாதிக்கும் வகையில் வற் வரி அறவிடுவதை அனுமதிக்கப் போவதில் லையென்ற ஜனாதிபதியின் கூற்றானது.
நகைப்புக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னிலை சோசலிச கட்சி நேற்று கொழும்பில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நாடு பொருளாதார ரீதியில் பாரிய கஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து கடன் தொகையை கோரியுள்ளது. அதனடிப்படையில் 36 மாதங்களில் மீளளிக்கும் வகையில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது.
என்றாலும் இந்த கடன் தொகையை 3பில்லியன் அமெரிக்க டொலர்வரை அதிகரிக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தையில் கலந்துகொள்வதற்காக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் ஆகியோர் வொஷிங்டனுக்கு பயணமாகியுள்ளனர்.
மேலும் அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அமெரிக்க டொலர் 3 பில்லியன் கிடைத்தாலும் எதிர்வரக்கூடிய 12மாதங்களுக்கு நாட்டின் கடன் மற்றும் வட்டி தவணையை செலுத்துவதற்கு மாத்திரம் அமெரிக்க டொலர் 4.5 மில்லியன் தேவைப்படுவதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் டபிள்யூ.ஏ.சிறிவர்த்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தியம் மற்றும் ஏனைய நிறுவனங்களிடம் கடன் பெறுவதை தவிர வேறு வழியில்லை.
அத்துடன் சர்வதேச நாணய நிதியம் இந்த கடன் தொகையை வழங்குவதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. குறிப்பாக வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த தேசிய வருமானத்தில் 5.4 வீதத்துக்கு மேல் செல்லாமல் அரசாங்கத்தின் செலவுகள் குறைக்கப்படவேண்டும் எனவும் வரி முறைமையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைக்கமையவே அரசாங்கம் வரவு செலவு திட்டத்தில் 30அமைச்சுக்களின் மூலதன செலவை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. அதில் கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்,போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, மகவெலி போன்ற அமைச்சுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று அரசாங்கம் கடந்த வரவு செலவு திட்டத்தில் வரி முறைமையில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியதுடன் தனவந்தர்களிடமிருந்து கூடுதலான வரி அறவிடும் முறையை அறிமுகப்படுத்தியிருந்தது. என்றாலும் கடந்த மாதம் பிரதமர் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் தனவந்தர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் வரி அதிகரிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
ஆனால் அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிவிலக்களிக்கப்படும் என தெரிவித்த போதும் அந்த பொருட்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த அறிவித்தலும் விடுக்க வில்லை. இவ்வாறான நிலையில் எதிர்வரும் 2ஆம் திகதிமுதல் வரி அதிகரிக்கும்போது சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கப்படும்.
அத்துடன் அரசாங்கம் கடந்த வரவு செலவு திட்டத்தில் தனவந்தர்களுக்கு அறிமுகப்படுத்திய மூலதன வரி,மாளிகை வரி அவர்களின் எதிர்ப்பின் காரணமாக நீக்கியிருக்கின்றது. ஆனால் வற் வரி 15வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சாதாரண பொது மக்களே கூடுதலாக பாதிக்கப்படப் போகின்றனர்.
அத்துடன் எதிர்வரும் 2ஆம் திகதி முதல் வற் வரி அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ள நிலையில், மக்கள் பாதிக்கும் வகையிலான வரி அதிகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வற் வரி 15வீதத்தால் அதிகரிக்கப்போவதாக பிரதமர் பாராளுமன்றத்தில் ஒரு மாதத்துக்கு முன்னரே தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் இந்த கூற்றானது நகைச்சுவையாகவே இருக்கின்றது.
நாட்டின் கடன் தொகையை குறைப்பதற்காக சாதாரண மக்கள் மீது சுமையை சுமத்த முற்படும் அரசாங்கம் அமைச்சர்களின் வரப்பிரசாதங்களை குறைப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே தனவந்தர்களுக்கு நிவாரணம் வழங்கி சாதாரண மக்கள் மீது வற் வரி அதிகரிக்கும் அரசாங்கத்தின் வரி கொள்கையை எதிர்க்க மக்கள் அணி திரளவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM