இந்தியாவுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அமெரிக்கா உதவ வேண்டும் என பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவின் புல்வமாவில் கடந்த பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 44 படையினர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தான் இந்தியாவுக்கிடையே பதற்ற நிலை அதிகரிதத்தது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த உரையாடலின்போது ஷா மெக்மூத் குரேஷி,

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க பாகிஸ்தான் எடுத்து வரும் நடவடிக்கைகளை எடுத்துக் கூறியதுடன், பாகிஸ்தான் இராணுவத்திடம் பிடிபட்ட இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன், திரும்ப ஒப்படைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு அமெரிக்கா உதவ வேண்டும் என்று குரேஷி கேட்டுக்கொண்டார்.

இந்த பிராந்திய நிலவரம் குறித்தும், இருதரப்பு உறவு குறித்தும் இருவரும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பாகிஸ்தான் - அமெரிக்கா நல்லுறவு, சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பதற்றத்தை தணிக்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை என்றும் குரேஷி கூறினார். 

ஆப்கானிஸ்தான் அமைதி முயற்சிகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுப்பது என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும், ஒரு நிகழ்ச்சியில் குரேஷி பங்கேற்று பேசும்போது, இந்த ஆண்டு சீக்கிய குரு குருநானக் பிறந்த நாளில், கர்தார்பூர் பாதை திறக்கப்படும் என்று அறிவித்தார்.