Published by R. Kalaichelvan on 2019-04-03 17:53:34
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் உயிர் பாதுகாப்பு குறித்த புதிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றின் தேவை கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கொழும்பு இலங்கை மன்றத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை பாராட்டி இடம்பெற்ற ஜனாதிபதி பாராட்டு விருது விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு நேரடி பங்களிப்பை வழங்கிவரும் முப்படையினர் மற்றும் அரச அதிகாரிகளின் சேவையை பாராட்டி அவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
நாட்டுக்குள் கொண்டு வரப்படும் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருள்களை கண்டறிதல் மற்றும் அதன் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான புதிய தொழிநுட்ப உபகரணங்களை விரைவில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பெற்றுக்கொடுக்க தான் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உலகில் வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் எவ்வித தொழிநுட்ப உபகரணங்களுமின்றி அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் பணிகளை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள் அனைவருக்கும் தேசத்தின் கெளரவத்தை வழங்குவதாக குறிப்பிட்டார்.போதைப்பொருள் ஒழிப்பக்காக இன்று அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு கிடைத்து வருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நாட்டின் பொதுமக்களும் போதைப்பொருளுக்கெதிரான போரில் இணைந்துகொண்டு இருப்பது அதனை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு நல்ல சந்தர்ப்பம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி,அனைத்து துறைகளினதும் பங்களிப்புடன் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென்றும் நம்பிக்கை வெளியிட்டார்.