(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

தோட்டப்புற பிள்ளைகள் படித்து உயர் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டால் தங்களுக்கு அரசியல் செய்ய முடியாதுபோகும் என்ற அச்சத்தில் தானோ மலையக அரசியல்வாதிகள் தோட்டப்புற மக்களின் பிரச்சினைகளை  கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்ற சந்தேகம் இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். 

நாங்கள் அமைக்கும் அரசாங்கத்தில் தோட்ட மக்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்தை முன்னேற்றும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம். அத்துடன்  அவர்கள் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள விசேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார். 

அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இதுவரை 4 வரவு - செலவு திட்டங்களை முன்வைத்து அதில் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருக்கின்றது. என்றாலும் இதுவரை அந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக தாேட்டப்புற மக்கள் சுமார் 150 வருடங்களுக்கு அதிக காலம் அங்கு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்னும் அந்த மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுக்க முடியாமல்போயுள்ளது.

பாராளுமன்றத்தில்  இன்று புதன்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்ட தெரிவித்துள்ளார். 

குறிப்பாக தோட்ட பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம் தொடர்பாக பாரிய பிரச்சினை இருந்து வருகின்றது. நாங்கள் மருத்துவ சிகிச்சைக்கு எமது பிரதேசத்தில் இருக்கும் எந்த வைத்தியசாலைக்கும் செல்ல முடியும். ஆனால் தாேட்ட மக்கள் தோட்ட கம்பனி வைத்தியசாலைக்கு மாத்திரமே இன்றும் செல்லவேண்டிய நிலை இருக்கின்றது. அதில் பல குறைபாடுகள் இருந்து வருகின்றன. அதுதொடர்பாக கவனிப்பார் இல்லாமல் இருக்கின்றது.

மேலும் மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கத்தில்  தோட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொடுக்க 2015 இல் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தோம். ஆனால் தற்போது அந்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் அந்த மக்களின் பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பாக மலைய அரசியல்வாதிகள் கூட கண்டுகொள்வதில்லை.

அத்துடன் தோட்டப்புற பிள்ளைகள் படித்து உயர் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டால் தங்களுக்கு அரசியல் செய்ய முடியாதுபோகும் என்ற அச்சத்தில்தானோ மலையக அரசியல்வாதிகள் இதுதொடர்பாக கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்ற சந்தேகம் இருக்கின்றது என மேலும் தெரிவித்துள்ளார்.