(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பிரபாகரின் உடன்படிக்கைக்கு வளைந்துகொடுக்க முடியாது. புலிகளை ஆதரிக்க முடியாது, நாட்டினை காவுகொடுக்க முடியாது என ரணில் விக்கிரமசிங்க கூறிய விடயங்களே ரணிலை  சூழ்ச்சிக்காரன் எனக்கூறி  தேர்தலுக்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் பிரபாகரன் வடக்கில் தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தார், இதுவே 2004 தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின்  தோல்விக்கு காரணமென அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02.04.2019) வரவு செலவு திட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி திறமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

இந்த நாட்டில் வடக்கு மக்களுக்கு சிங்களம் தெரியாது போனதும் தெற்கு மக்களுக்கு தமிழ் தெரியாது போனதுமே இந்த நாட்டில் குழப்பம் ஒன்று உருவாகக் காரணமாக அமைந்தது. 1956 ஆம் ஆண்டு தொடக்கம் முரண்பாடுகள் ஏற்பட இதுவே காரணமாக அமைந்தது. முதல் குழப்பம் இங்கிருந்தே ஆரம்பித்து யுத்தம் வரையில் வந்து முடிந்தது. 

ஆகவே மொழி பிரச்சினை ஒன்றே இந்த நாட்டில் குழப்பத்துக்கு காரணம். எனினும் எமது ஆட்சியில் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் நாம் அனைவரும் இணைந்து மொழி பிரச்சினைக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கில மொழி என மூன்று மொழியினையும் நாம் தீர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். மும்மொழிகளையும் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமித்தும் அதேபோல் வடக்கிலும் தெற்கிலும் கலப்பு மத நிகழ்வுகளை நடத்தவேண்டும். வடக்கில் பௌத்த மாநாடுகள் மற்றும் தெற்கில் இந்து கலாசார நிகழ்வுகளை நடத்துவோம். அதுவே நல்லிணக்கம். 

ஐக்கிய தேசிய கட்சி ஒருபோதும் இனவாதத்தை தூண்டவில்லை. ஒரு உண்மையை இப்போது கூறுகின்றேன். 2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியபோதும் இங்கிலாந்து நபர் ஒருவர் என்னுடன்  தொடர்புகொண்டார். 

அப்போது என்னுடன் மலிக் சமார்விக்கிரமவும் வாகனத்தில் இருந்தார். அப்போது இந்த தேர்தலில் வேட்பாளர்கள் யார் என அவர் வினவினார்.  மஹிந்த ராஜபக் ஷவிம் -ரணில் விக்கிரமசிங்கவும் வேட்பாளர்கள் என கூறினேன்.

சிறிது நேரம் பேசிய அவர் வடக்கில் ஒரு பாதிரியார் ஒருவரைக் கூறி அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தக்கூறினார். எனினும் அப்போது ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளை எதிர்த்ததுடன் அவர்களின் எந்தவொரு உடன்படிக்கைக்கும் என்னால் முதுகை வளைக்க முடியாது.

பிரபாகரின் உடன்படிக்கைக்கு வளைந்துகொடுக்க முடியாது. புலிகளை ஆதரிக்க முடியாது, நாட்டினை காவுகொடுக்க முடியாது  என கூறினார். அந்த சம்பவமே  ரணில் சூழ்ச்சிக்காரன் என்பதைக் கூறி தேர்தலுக்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் பிரபாகரன் வடக்கில் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாம் என கூறினார். 

இன்று நாம் இனவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். சிங்கபூர் போன்ற நாடுகளில் சிறப்பு நீதிமன்றம் ஒன்று உள்ளது, இனவாதம், மதவாதம் பேசினால் அந்த நீதிமன்றத்தில் தண்டனை உண்டு. ஆகவே அவ்வாறன ஒரு நீதிமன்றத்தில் இங்கும் உருவாக்க வேண்டும்.

இனவாதத்தை, மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் அனைத்தையும் தடுக்க வேண்டும். இந்த நாட்டில் இரத்தக்கறை படிவத்தை இடமளிக்க கூடாது. எந்த மதமும் நாட்டில் யுத்தத்தை உருவாக்க வலியுறுத்தவில்லை என்றார்.