முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீச் காந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம், அவரது இயக்கத்திற்கான 5 கோடி ரூபாவில் முதல் தவணையாக 50 இலட்சம் ரூபாவைக் கையளித்ததுடன், தனது குண்டு துளைக்காத அங்கியையும் வழங்கினார். அவ்வாறு வழங்கிவிட்டு, இலங்கை - இந்திய உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரனுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சரும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பண்ருட்டி எஸ்.இராமசந்திரன் 'நியூஸ் டுடே" தொலைக்காட்சிக்கு வழங்கியிருக்கும் பிரத்யேக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.

சமாதான உடன்படிக்கை கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட போது, நானும் அங்கு பிரசன்னமாகியிருந்தேன். தனது பிரதிநிதியாக அந்த நேரம் என்னைக் கொழும்பிற்கு அனுப்பியிருந்தார் என்றும் இராமச்சந்திரன் கூறினார்.

இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையில்  சம்பந்தப்பட்ட பிரதான தலைவர்களான ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, அவருக்குப் பிறகு ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணசிங்க பிரேமதாஸ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் எம்.ஜி.ஆர் உட்பட பலரும் இன்று உயிருடன் இல்லை. அதில் சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பாலும் தான் மாத்திரமே இன்று உயிருடன் இருப்பதாகவும் இராமசந்திரன் குறிப்பிட்டார்.

ராஜீவ் காந்தி தன்னுடனும், எம்.ஜி.ஆருடனும், பிரபாகரன் மற்றும் இலங்கைத் தமிழ் தலைவர்களுடனும் நடத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து நினைவுகூர்ந்த பண்ருட்டி, எம்.ஜி.ஆரை சந்தித்து இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கைக்கு அவரின் சம்மதத்தைப் பெறுவதற்காக இலங்கைக்கான முன்னாள் இந்தியத்தூதுவர் ஜே.என்.தீக்ஷித்தை அனுப்பியிருந்தார். 

நானும் அந்தச் சந்திப்பின் போது உடனிருந்தேன். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு தனியலகிற்கு தேர்தல்களை நடத்துவது உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உடன்படிக்கை அமைந்திருந்தது. அந்த உடன்படிக்கை இலங்கைத் தமிழர்களின் தமிழ் தாயகக் கோட்பாட்டை மறைமுகமாக முதற்தடவையாக ஏற்றுக்கொண்டது. தமிழ்ப் பகுதிகளில் ஒரு மாகாணசபையின் ஊடாக விடுதலைப் புலிகளும், ஏனைய தமிழ்த் தரப்பினரும் ஆட்சி செய்வதற்கான ஏற்பாட்டை உடன்படிக்கை கொண்டிருந்தது. அதன் உத்தரவாதத் தரப்பாக இந்திய அரசாங்கம் காணப்பட்டது. உடன்படிக்கையொன்றை உத்தரவாதப்படுத்துமாறு இன்னொரு அரசாங்கத்திடம் கேட்கப்பட்டது உலகில் அன்று வழமைக்கு மாறானதாக இருந்தது என்று கூறினார்.

'உடன்படிக்கைக்கு ஆதரவாளராக எம்.ஜி.ஆர் இருந்தபோதிலும், எம்.ஜி.ஆர் ஒரு திரிசங்கு நிலையை எதிர்நோக்கினார். ராஜீவ்காந்தி வேண்டுகோள் விடுத்ததன் பிரகாரம் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதை எம்.ஜி.ஆர் விரும்பியிருந்த போதிலும், அதனைப் பிரபாகரன் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அவரின் நம்பிக்கையை வென்றெடுக்க எம்.ஜி.ஆரால் முடியாமல் போய்விட்டது. பிரபாகரனுடன் அவர் தொடர்ச்சியாகப் பேசினார். பிரபாகரனின் மனதை மாற்றுவதற்குத் தவறியதையடுத்து எம்.ஜி.ஆர் பெரும் குழப்பத்திற்கு உள்ளானார். தன்னால் இயன்றவரை முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. தனித்தமிழ் ஈழம் என்பதற்குக் குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிடிவாதமாக இருந்தார் பிரபாகரன்."

'ராஜீவ் காந்தி கொழும்பை விட்டுப் புறப்படுவதற்கு முன்னதாக இறுதிச்சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்திய மத்திய அரசாங்கம் எம்.ஜி.ஆரை டில்லிக்கு அழைத்தது. அவர் தன்னுடன் என்னையும் கூட்டிச்சென்றார். எங்களுடன் நீண்டநேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரபாகரன் சம்மதத்தைப் பெறுமாறு எங்களை ராஜீவ் காந்தி கேட்டுக்கொண்டார். டில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் எம்.ஜி.ஆரும் நானும் பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். பிரபாகரனுக்கு உதவியாக அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் கலந்துகொண்டார். விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் உறுதியாக இருப்பதால் உடன்படிக்கையை ஆதரிக்க தன்னால் முடியவில்லை என்று பிரபாகரன் கூறினார்."

'ராஜீவ் காந்தியை பிரபாகரன் சந்தித்த போது உடன்படிக்கையில் விடுதலைப் புலிகள் கைச்சாத்திட வேண்டுமென இந்தியா கேட்காது என்று அவர் கூறினார். அமைதியான முறையில் உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்பதை மாத்திரமே இந்தியா விரும்புகின்றது என்று அவர் சொன்னார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டிய தேவையில்லை என்றும் பிரபாகரனிடம் இந்தியப் பிரதமர் கூறினார்."

'தமிழ்நாட்டில் பாதுகாப்பான ஒரு இடத்தில் ஆயுதங்களைப் புதைத்து வைத்துவிட்டு, பின்னர் தேவையேற்படும் பட்சத்தில் அதை எடுத்துக்கொள்ள முடியும் என்றும் பிரபாகரனுக்குக் கூறப்பட்டது. வடக்கு – கிழக்கு இணைந்த தமிழ் மாகாணத்தின் முதலமைச்சர் பதவியை விடுதலைப் புலிகள் வகித்துக் கொள்ளலாம் என்றும், ஏனைய தமிழ்த் தலைவர்களை உள்ளடக்கி அந்த மாகாணசபை நிர்வாகத்தை நடத்தலாம் என்றும் இந்தியா அவருக்குக் கூறியது. ராஜீவ் காந்தி தனது குண்டு துளைக்காத அங்கியை பிரபாகரனிடம் கொடுத்தார். அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு உதவியாக வழங்குவதற்கு இந்தியா இணங்கிய 5 கோடி ரூபாவில் முதல்தவணைப் பணமாக 50 இலட்சம் ரூபாவையும் ராஜீவ் காந்தியே தனது கையால் கொடுத்தார்" 

'கொழும்பில் உடன்படிக்கை கைச்சாடப்படும் வைபவத்தில் தனது சார்பில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர் என்னை அனுப்பிவைத்தார். இலங்கையின் தலைநகரில் அப்போது ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்தது. மக்கள் நடமாட்டம் அரிதாக இருந்தது. ராஜீவ் காந்தியும், ஜெயவர்தனவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட வேளையில் நானும் அங்கு பிரசன்னமாகியிருந்தேன். உடன்படிக்கை இலங்கைத் தமிழருக்கு மிகக் கூடுதலான உரிமைகளை வழங்குவதாக உணர்ந்து பௌத்த பிக்குமாரும், சிங்களத் தலைவர்களும் அதற்கு எதிராக இருந்தார்கள் என்பது வெளிப்படையானது. ராஜீவ் காந்தியை கொழும்பு ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக அணிவகுப்பு மரியாதையின் போது கடற்படை வீரனொருவன் தனது ரைபிலினால் தாக்கினான் என்றபோதிலும், பிரதமரின் பாதுகாவலர்கள் துரிதமாகச் செயற்பட்டு அவரைக் காப்பாற்றினார்கள்."

'அதற்குப் பிறகு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் உடன்படிக்கைக்கு எம்.ஜி.ஆர் வழங்கிய ஆதரவிற்காக ராஜீவ் காந்தி பகிரங்கமாக நன்றி தெரிவித்தார்."

'இந்திரா காந்தி மீதும், ராஜீவ் காந்தி மீதும் எம்.ஜி.ஆர் பெரும் மரியாதை வைத்திருந்தார். ஜவகர்லால் நேருவையும், அவரது குடும்பத்தையும் அவர் பெரிதாகப் போற்றினார். முன்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்த எம்.ஜி.ஆர் நேருவின் கோட்பாட்டினாலும், பேச்சுக்களாலும் கவரப்பட்டார். சென்னையில் மருத்துவமனையில் தனது கட்டிலுக்கு அருகாக இந்திரா காந்தி அமர்ந்திருந்த புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர் கண்ணீர்விட்டு அழுவார். அப்பலோ வைத்தியசாலையில் எம்.ஜி.ஆர் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரைப் பார்ப்பதற்கு இந்திரா காந்தி சென்னை வந்தபோது எடுத்த படம் அது. பிறகு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு எம்.ஜி.ஆரை அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் இந்திரா காந்தி செய்தார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நாட்களிலேயே இந்திரா காந்தி கொல்லப்பட்டார்." என்று இராமசந்திரன் நேர்காணலில் கூறினார்.

சமாதான உடன்படிக்கையின் வடிவில் அரசியல் தீர்வையும், முதலமைச்சர் பதவியையும் விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டுமென்று இராமசந்திரனிடம் கேட்கப்பட்ட போது, 'உலக நிலைவரம் மாறிவிட்டது. பயங்கரவாதச் செயற்பாடுகளையும், பயங்கரவாத அமைப்புக்களையும் ஆதரிக்க உலகில் எந்தவொரு நாடும் விரும்பவில்லை என்பதையும் விடுதலைப் புலிகள் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். ஒரு பயங்கரவாத இயக்கமாக உலகில் விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்யப்பட்டிருந்தார்கள். தமிழீழத்தை ஆதரிக்கவோ அல்லது அங்கீகரிக்கவோ நாடுகள் முன்வருமென எதிர்பார்ப்பதற்கில்லை. தமிழீழம் என்பது நடைமுறையில் சாத்தியமானது அல்ல என்பதையும் விடுதலைப் புலிகள் விளங்கிக்கொண்டிருக்க வேண்டும்" என்று அவர் பதிலளித்தார்.

'1980 களின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழ் தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி அளிப்பதற்கு காலஞ்சென்ற பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்ட போது, அது தீவிரவாதத்தை ஆதரிக்கும் செயல் என்று கண்டித்து சில நாடுகள் கேள்வி எழுப்பின. பிறகு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்த, பிரதமர் ராஜீவ் காந்தியின் கீழ் இந்திய அரசாங்கம் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை என்ற முடிவை எடுத்தது. இந்தியாவிலுள்ள மாநிலம் ஒன்றுக்கு இருக்கக்கூடியதைப் போன்ற அதிகாரங்களை இலங்கையின் தமிழ் பகுதிகளுக்கு வழங்கும் அரசியல் தீர்வொன்றை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கைக் குழுக்களுக்குக் கூறப்பட்டது."

'துரதிஷ்டவசமாக நிலைவரங்களின் யதார்த்தத்திற்கு இசைவாக நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள விடுதலைப் புலிகளால் முடியவில்லை. தமிழீழப் போராட்டத்திற்கு இந்தியாவின் ஆதரவு தனக்குத் தேவையில்லை என்றும், தமிழீழத்தை இந்தியா அங்கீகரிப்பதை மாத்திரமே தான் விரும்புவதாகவும் பிரபாகரன் கூறியிருந்தார். தமிழீழ இலட்சியத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று இந்தியா கூறியபோதே அதற்காகப் போராடுவது பயனற்றதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான ஒரு செயல் என்பதை விடுதலைப் புலிகள் விளங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இறுதியில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு, போரின் இறுதியில் இலங்கைப் படைகளிடம் தோல்வியடைவதற்கு அது வழிவகுத்தது."

'ராஜீவ் காந்தி மாத்திரமல்ல, அவருக்குப் பின்னர் பிரதமராகப் பதவியிலிருந்த வி.பி.சிங், நரசிம்மராவ் மற்றும் வாஜ்பாய் ஆகியோர் தங்களால் தமிழீழத்திற்கு ஆதரவளிக்க முடியாது என்றும், சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் அரசியல் தீர்வொன்றை இலங்கைத் தமிழ்க் குழுக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்."

'குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு நரேந்திர மோடியின் அரசாங்கம் உட்பட இந்தியாவின் சகல அரசாங்கங்களுமே தமிழீழத்தை ஆதரிக்கப் போவதில்லை என்றும், அரசியல் தீர்வொன்றைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வதையே தாங்கள் விரும்புவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார்கள்" என்று பண்ருட்டி விளக்கமளித்தார்.

இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் செயற்பாடுகள் குறித்து கருத்துக் கூறிய இராமசந்திரன், 'விடுதலைப் புலிகளும், ஜனாதிபதி பிரேமதாஸ தலைமையிலான இலங்கை அரசாங்கமும் ஒன்று சேர்ந்ததும், இலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையை வெளியேறுமாறு கேட்டதும் விசித்திரமான விடயங்களாகும்" என்று கூறினார்.

'சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி 1991 மே 21 ஆம் திகதி கொலை செய்யப்பட்டதை தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வைத்துத்தான் நான் அறிந்து கொண்டேன். அதனைக் கேட்டு நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன்" என்று கூறிய பண்ருட்டி, 'ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு இந்தியா உட்பட உலகின் சகல அரசாங்கங்களும் நரசிம்மராவ், தேவகௌடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங், மோடி போன்ற இந்தியத் தலைவர்களும் இலங்கை தொடர்பில் தலையீடு செய்யாத கொள்கையொன்றைக் கடைப்பிடிக்கவே தீர்மானித்தனர். அதன் பிறகு இலங்கை விவகாரத்தில் தலையிட இந்தியா மறுத்து விட்டது" என்று தெரிவித்தார்.