ஐஸ்லாந்தில் தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகள் இருந்த இடத்தில்  திடீரென பனிப்பாறையொன்று உடைந்து விழுந்த போது ஏற்பட்ட பாரிய அலையிலிருந்து சுற்றுலாப்பயணிகள் தப்பித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஐஸ்லாந்தில் இருக்கும் தேசிய பூங்காவின் ஏரிப் பகுதியில் பிரீடர்மேர் குர்ஜோகுல் (Breidamer kurjokull) என்ற பனிப்பாறையொன்ற திடீரென உடைந்து விழுந்ததை தொடர்ந்து மிகப் பெரிய அலை எழும்பி இருக்கிறது.

அந்தப் பகுதியில் நின்றிருந்த பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஏரியின் அழகை ரசித்துக் கொண்டிருந்த போதே திடீரெனப் பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து விழுந்திருக்கிறது.

கடல் நீரில் விழுந்த பனிப்பாறைகளால் மிகப் பெரிய அலை ஒன்று உருவாகியிருக்கிறது. அதைச் சற்றும் எதிர்பாராத அவர்கள் வேகமாக ஓடி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்கள்.

இந்த காணொளியை மன்டலர் (Mantler) என்பவர் அவரது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

அதில், ” அந்தப் பகுதியில் அடிக்கடி நடக்கும் என்றாலும் இது சற்றுப் பெரிய அளவிலானது என்றும் அதே சமயம் இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை” என்றும் அவர் தெரிவிதுள்ளார்.