ஜனாதிபதி தனது சுயரூபத்தை காட்டுகின்றார் : சர்வதேச தலையீடுகள் அவசியம் - ஸ்ரீதரன்

By Daya

03 Apr, 2019 | 03:38 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை தருவதைப்போல தட்டிக்கழித்தமையே அதிகமாகும். இந்த அரசாங்கமும் அதே தறையே செய்து வருகின்றது. பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச தலையீடுகள் அவசியம். இதில் இந்தியாவோ அமெரிக்காவோ பாராமுகமாக இருக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுயரூபத்தை காட்டுகின்றார் எனவும் சுட்டிக்காட்டினார். 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02.04.2019) வரவு - செலவு திட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, அபிவிருத்தி திறமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

ஜெனிவாவில்  இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதை ஏற்றுகொள்ள முடியாது என்ற ஜனாதிபதியின் கருத்து வீரகேசரி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.  அந்த  செய்தியில் அவரது உரை மிகவும் கடுமையான இனவாத கருத்துக்களை முன்வைப்பதாகவே  நான் கருதுகின்றேன். 

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டவர பல நாடுகள் இலங்கைக்கு உதவியது. தமிழ் மக்களை கொன்று குவிக்க ஆயுத உதவிகளை வழங்கி பயங்கரவாதம் என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டு தமிழரின் தேசிய போராட்டத்தை நசுக்க பல நாடுகள் உதவி புரிந்தது. அதே சர்வதேசம் இப்போது யுத்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கையை கேள்வி கேட்கின்றது. 

ஐக்கிய நாடுகளின் பல குழுக்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் யுத்த குற்றத்தை நிரூபித்து வருகின்றனர். அவ்வாறான நிலையில் யார் தமிழர்களை கொண்டார்களோ யார் இரசயான குண்டு போட்டு தமிழர்களை கொண்டார்களோ அவர்களின் கைகளில் தமிழ் மக்களை ஒப்படைத்து அவர்களே தமிழ் மக்களுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பார்கள் என கூறுவது எவ்வாறு ஏற்றுகொள்ள முடியும். அதனால் தான் சுயாதீன விசாரணை ஒன்றினை நடத்த சர்வதேச விசாரணை வேண்டும் என நாம் கூறினோம். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அன்று ஜனாதிபதியாக்க தமிழர்கள் விருப்புடன் வாக்களித்தனர். மஹிந்த ராஜபக் ஷவின் கோட்டைக்குள் இருந்து வெளிவந்த ஒருவரை  நம்பி  தமிழர்கள்  வாக்களித்தனர். எதிரியின் பாசறையில் இருந்து வெளிவந்த ஒருவரை எதிரிமாற்றம் செய்யவும்  இவர் நாட்டில் நன்மைகளை கொண்டுவருவார், பாதிக்கப்பட்ட தமிழர்களின் விடயங்களில் நீதியை தருவார் என்ற பல நம்பிக்கைகளை கொண்டு தமிழர்கள் வாக்களித்தனர். ஆனால் அவரது சுயரூபாம் இன்று வெளிவந்து கொண்டுள்ளது. 

இலங்கையில் எவரும் வந்து தமிழர் தரப்பின் அநீதிகளை பார்க்க வேண்டாம் எனவும், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை காரியாலயங்களை மூடிவிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பேசுகின்றார். இன்று சர்வதேசமே தமது மனசாட்சியை கேட்கும் நிலைமை உருவாகியுள்ளது. இலங்கையின் விடயத்தில் நாம் தவறிழைத்துவிட்டேன் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கூறியுள்ளார். சர்வதேசத்தினால் தான் நீதி கிடைக்கும் என நாம் கருதுகின்றோம். 

இந்த நாட்டில் நல்லிணக்கத்தை குழப்பிய நாயகர்கள் நாயகிகள் பலர் உள்ளனர்,பிரபாகரன் -ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது உடனே சந்திரிக்கா அம்மையார்  பாராளுமன்ற கலைத்தார். இது அவர் நல்லிணக்கத்துக்காக  செய்த துணிகரமான செயல். அதேபோல் சந்திரிக்கா அமையார் பிராந்தியங்களின் கூட்டு என்ற அரசியல் அமைப்பை கொண்டவந்த போது ரணில் விக்கிரமசிங்க பார்த்துக்கொண்டிருக்க அவரது கட்சியினர் தீயிட்டுக் கொளுத்தினர். 

இவ்வாறெல்லாம் நல்லிணக்கத்தை நாசமாக்கும் நடவடிக்கைகள் நடந்தது. தமிழர்களுக்கு தருவதைப்  போல தட்டிப்பறித்ததே அதிகமாகும். இந்த அரசாங்கமும் அதே தவறையே செய்து வருகின்றது. இந்த நாட்டில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எந்த அத்திவாரமும் போடப்படவில்லை. மாறாக தமிழர் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாத குழப்பங்களை உருவாக்கும் பாதையே உருவாக்கி வருகின்றனர். வடக்கில் இந்துக்கள் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை. பெளத்த ஆதிக்கம் பெருக்கெடுத்து வருகின்றது. நல்லிணக்க அமைச்சோ நல்லாட்சியோ இவற்றை தீர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 

சமாதானம் பேசுவது போல நாம் பேசிக்கொண்டாலும் மறுபக்கம் சிங்கள ஆக்கிரமிப்பு பலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது அடையாளங்கள் சிங்கள அடையாளமாக மாற்றப்பட்டு வருகின்றது. தமிழ் பௌத்தர் வாழ்ந்தார்கள். அவர்களின் சான்றுகளை சிங்களவர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். எமது எழுத்துக்களை மறைக்க சிங்கள எழுத்துக்கள் உருவாக்கப்படுகின்றது. இது நாட்டின் நல்லிணக்கம் அல்ல.

 அவ்வாறு அமையப்போவதில்லை. தமிழர் பாடப்புத்தங்களில் தமிழ் மன்னர்களின் வரலாறுகள் எங்கே? தொல்பொருள் என்ற பெயரில் சிங்கள ஆக்கிரமிப்பு மட்டுமே இடம்பெற்று வருகின்றது. சிங்கள புத்தங்களில் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் பரவுகின்றது. தமிழர் அடிமை என்பதை சித்தரிக்கும் வகையில் வடக்கில் இராணுவ சிலைகள் வைக்கப்பட்டுள்ளது என்றால்  எவ்வாறு நல்லிணக்கத்தை உருவாக்கும். 

தமிழர் மத்தியில் நல்லிணக்கத்தை கூறிக்கொண்டு சிங்களவர் அப்படியே இருந்தால் எவ்வாறு நல்லிணக்கம் வரும். யார் குற்றம் புரிந்தது? யார் அநியாயம் செய்தது? யார் யாருக்கு நல்லிணக்கம் கற்பிப்பது.

சமாதானம் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் யுத்த சின்னங்கள் தகர்க்கப்பட வேண்டும், எமது நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும், எமது மனதில் நாம் இலங்கையர் என்ற எண்ணம் வரவேண்டும்.  பொறுப்புக்கூறல்  என்ற விடயத்தில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம். இந்தியாவோ அமெரிக்காவோ பாராமுகமாக இருக்க முடியாது. 

இந்தியா மீண்டும் இந்த விடயங்களில் தலையிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் மீது மீண்டும் அடக்குமுறையை கையாளவேண்டாம். நல்லிணக்கத்தை பாதிக்கப்பட்ட மக்கள் மீது திணிக்க வேண்டாம், நீங்கள் மாற வேண்டும். அதுவே மாற்றத்தை உருவாக்கும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right