அருணாசலப் பிரதேசம், தைவான் தீவு ஆகியவற்றை சீனாவின் பகுதியாக குறிப்பிடாமல் உருவாக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை அழிக்க சீனா முடிவு செய்துள்ளது.

அருணாசலப் பிரதேச மாநிலத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா இன்னமும் அங்கீகரிக்கவில்லை. அந்த மாநிலத்தை திபெத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்து சீனா உரிமை கொண்டாடி வருகிறது. 

அதேபோல் தைவான் தீவையும் சீனா தனி நாடாக அங்கீகரிக்காமல் உள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா தெரிவித்து வருகிறது. சீனாவின் இந்த போக்கால், அந்நாட்டுக்கும் இந்தியா, தைவான் நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்நிலையிலேயே அருணாசலப் பிரதேசம், தைவான் தீவு ஆகியவற்றை சீனாவின் பகுதியாக குறிப்பிடாமல் உருவாக்கப்பட்ட 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை அழிக்க சீனா முடிவு செய்துள்ளது. 

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பகுதிகளை தவறாக குறிப்பிட்டு உருவாக்கப்பட்டிருந்த உலக வரைபடம், தைவானை சீனாவின் பகுதியாக குறிப்பிடாமல் உருவாக்கப்பட்ட வரைபடம் என மொத்தம் 30,000 உலக வரைபடங்களை சீனா கடந்த மாதம் அழித்தமையும் குறிப்பிடத்தக்கது.