12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 15 ஆவது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இத் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தான் எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் முறையே பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான் அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

தோனியின் சிறந்த தலைமைத்துவமும் வோட்சன், ராயுடு, ரய்னா, பிராவோ, உள்ளிட்டோரின் அதிரடியும், ஹர்பஜன், இம்ரான் தாஹிர்,  ஜடேஜா போன்றோரின் சிக்க வைக்கும் சுழல் பந்தும் சென்னை அணிக்கு பெரும் பலமாக உள்ளது.

இதேவேளை ஹர்பஜன் சிங் இப் போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றுவாராக இருந்தால் ஐ.பி.எல்.லில் வான்கடே மைதானத்தில் 50 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமை பெறுவார்.

ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளை எதிர்கொண்டுள்ளது. அதில் இரண்டு தோல்விகைளையும், ஒரு வெற்றியையும் பெற்று 2 புள்ளிகளுடன் 7 ஆம் இடத்தில் உள்ளது.

மும்பை அணி பலம் பெருந்திய அணியாக காணப்பட்டாலும், ரோகித் சர்மா மற்றும் டீகொக் ஓட்டம் எடுத்தால் தான் வெற்றி என்ற நிலையில் தங்கியுள்ளது. எனவே நடுத்தர வீரர்களின் பொறுப்பான ஆட்டம் அவசியம். அது போலவே பந்து வீச்சுலும் பும்ரா எதிரணியை கதிகலங்க வைத்தாலும், அவருக்கு துணையாக ஏனைய வீரர்களும் பந்து வீச்சில் தோள் கொடுக்க வேண்டும். 

மும்பை அணி தனது சொந்த ஊரில் சென்னையை எதிர்கொள்கின்றமையினால் இப் போட்டி சென்னைக்கு சற்று சவால் பொருந்தியதாக அமையலாம். எனவே இப் போட்டியில் மும்பை அணி சென்னை அணியை வீழ்த்தி, சென்னையின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.

இவ்விரு அணிகள் இதுவரை 24 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 13 போட்டிகளிலும், சென்னை அணி 11 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.