வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக பாவனையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரும், பொலிசாரும் பரிசோதனை நடவடிக்கையினைகடந்த மாதம் (30) இரவு 10.30 மணியில் இருந்து இரவு 12 மணிவரை  மேற்கொண்டிருந்தனர்.

பாவனையாளர் அதிகார சபையினரால் இன்றைய தினம் (02.04)  எரிபொருள் மாதிரியை நீதிமன்றத்தில்  முற்படுத்தாது நேரடியாக கொலநாவ எரிபொருள் கூட்டுத்தாபன ஆய்வு கூடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் 10 நாட்களுக்குள் பரிசோதனை முடிவுகள் கிடைத்ததன் பின்னர் நிலைப்பாட்டை தெரிவிப்பதாகவும்  வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச.நிலாந்தன் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவர் தனது கிணறு அடிப்பதற்கான இயந்திரத்துடன் கூடிய ஹன்ரர் ரக வாகனத்திற்கு வழமையாக டீசல் அடிக்கும் பாவனையாளர் ஒருவர் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாம் பெறும் டீசல் தொடர்பில் சந்தேகம் அடைந்து நேற்று இரவும் டீசல் அடிக்கும் போது தனது வாகனத்திற்கும் வேறு வெற்று கலன்களிலும் டீசலை பெற்றுள்ளார். அப்போது அந்த டீசலில் மண்ணெண்ணெய் மணம் வீசுவதாக உணர்ந்துள்ளார். 

இதனையடுத்து வவுனியா நகரில் உள்ள பிறிதொரு எரிபொருள் நிலையத்தில் வெற்றுப் போத்தல் ஒன்றில் டீசலைப் பெற்று வந்து இரு டீசல்களையும் ஓப்பிட்டு பார்த்த போது டீசலில் மண்ணெய்ணெய் கலந்துள்ளதாகவும் இரு டீசல்களுக்கும் இடையில் வேறுபாடு இருப்பதையும் இனங்கண்டுள்ளார்.

இதனையடுத்து வவுனியா பாவனையாளர் அதிகாரசபையினருக்கு முறைப்பாட்டை மேற்கொண்டதுடன், வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் தமிழ் மொழி மூலமான தொலைபேசி அழைப்பு முறைப்பாட்டு பிரிவுக்கும் தனது முறைப்பாட்டை மேற்கொண்டார். 

சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் டீசல் மாதிரிகளை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பெற்று அதனை சுயமாக பரிசோதித்த போது வேறுபாடு காணப்படுவதாக தெரிவித்து அந்த மாதிரிகளை சீல் செய்து முறைப்பாட்டை பதிவு செய்து எடுத்துச் சென்றனர்.

இதே போல் அங்கு வருகை தந்த பாவனையாளர் அதிகாரசபை உத்தியோகத்தர்களும் மூன்று வெற்றுப் போத்தல்களில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலை பெற்று அங்கு கடமையில் நின்ற ஊழியரின் கைவிரல் அடையாளத்துடன் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்கள் மற்றும் விசாரணைக்காக வந்த பொலிசார் முன்னிலையில் அதனை சீல் செய்து எடுத்துச் சென்றனர். மூன்று மாதிரிகளில் ஒரு மாதிரியை எரிபொருள் நிரப்பு நிலையத்திடமும் வழங்கியிருந்தனர். 

இதேவேளை முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெறும் நிலையிலும் குறித்த எரிபொருள் நிலையத்தில் தொடர்ந்தும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இது  தொடர்பில் பாவனையாளர்களால் மேலும் முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் பரிசோதனை அறிக்கை வரும் வரை தம்மால் தற்காலிகமாக சீல் வைக்க முடியும் எனவும் பாவனையாளர் அதிகார சபையினர் தெரிவித்திருந்தனர்.