(நா.தனுஜா)

மின் நெருக்கடிக்கான தீர்வாக மின்சாரத்தை தனியாரிடமிருந்து உயர்ந்த விலைக்கு கொள்வனவு செய்து, அதன் மூலமாக தமது சட்டைப் பைகளை நிரப்பிக் கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தேசிய புத்திஜீவிகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மின்சாரம் என்பது நாட்டிலுள்ள மக்களின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. மின்வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சாரசபை தயாரிக்கின்ற நீண்டகால செயற்பாட்டுத் திட்டத்தின்படி மின்நெருக்கடி நிலைக்கான மாற்றுத்தீர்வு குறித்து ஏன் ஆராயப்படவில்லை? அடுத்த வாரம் மக்கள் தமிழ், சிங்களப் புத்தாண்டைக் கொண்டாடவுள்ள நிலையில் மின்வெட்டு பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவிக்கும். எனவே இதனை அரசாங்கம் திட்டமிட்டு மேற்கொண்ட சதி என்றே கூறவேண்டும்.

அதேபோன்று விரைவில் இப்பிரச்சினையைத் தீர்த்து, மின்சாரத்தை வழங்குவோம் என்றும் கூறுகின்றார்கள். அவ்வாறெனின், மின்சாரத்திற்கான நெருக்கடி நிலையொன்றை உருவாக்கி, அதற்கான கேள்வியைத் தோற்றுவித்து, தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதே இவர்களது நோக்கமாக இருக்கின்றது என்றே கருத வேண்டியுள்ளது. தனியார்துறை இலாபம் உழைப்பதற்கு மக்களின் நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும் செயற்பாடே இதுவாகும் எனவும் அவ் அமைப்பு குற்றம் சாட்டியது.