நாட்டின் முன்னுள்ள சமூக, பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதில் அரசியல்வாதிகளின் பணிகளை பார்க்கிலும் நாட்டின் கல்விமான்களின் தலையீடு மிகவும் முக்கியமானதாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

எனவே நாட்டின் முன்னுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு கல்விமான்களின் அணியொன்று நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

“INNOVATE SRI LANKA 2019” கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது இன்றும் நாளையும் சிறிமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்.

பல்வேறு துறைகளில் புத்தாக்கம் மற்றும் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் தற்போது நேரடிப் பங்களிப்பை வழங்கிவருவதுடன், பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தாக்கங்களை ஒன்று திரட்டி “INNOVATE SRI LANKA 2019” கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டார். 

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க உள்ளிட்ட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், விஞ்ஞான, தொழிநுட்ப புத்தாக்கத் துறையில் சர்வதேச தூதுவராக கடமைபுரியும் வித்யாஜோதி கலாநிதி பந்துல விஜே உள்ளிட்ட நிபுணர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.