(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தனி நபர்களை இலக்குவைக்காமல் அரச நிதி மோசடிசெய்த அனைவருக்கெதிரான வழக்கு  நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடா மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சூத்திரதாரியை சட்டத்துக்குமுன் நிறுத்தி அரசாங்கத்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் குற்றத்தில் இருந்து தப்பிக்கொள்ள வேண்டும். 

பிணை வழங்கும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் நீதி மன்றங்களில் உள்ள அரச நிதி மோசடி  தொடர்பான வழக்குகள் அனைத்தையும் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.