எதிர்வரும் ஜூன், ஜூலை மாதத்திற்குள்ளாக மாகாண சபைத் தேர்தலை நடாத்த அரசு உத்தேசித்திருப்பதாக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்பட்டு வரும்  விடயம் சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதியும் நாங்களும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும், எந்தக்காரணம் கொண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றோம். 18 மாதங்களுக்கு மேலாக மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளன. அரச அதிகாரிகளிடம் நிர்வாகத்தினை முழுமையாக ஒப்படைக்க முடியாது, மக்களுடைய நிர்வாகத்தினை மக்கள் பிரதிநிதிகள்தான் செய்ய வேண்டும், எனினும் அரச அதிகாரிகள் நிர்வாகத்தினைத் தொடர்ந்து செய்து வரும் இந்நிலை தொடரக் கூடாது. ஆகவே, யுத்தம் இல்லாத, அமைதியான தேர்தலை நடத்தக்கூடிய ஒரு சூழ்நிலை இருந்தும் கூட தேர்தல் இல்லாமல் கிழக்கு மாகாண சபை இவ்வாறு செல்வதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும், ஜனாதிபதியும் நாங்களும் அரசாங்கத்திடமும் பிரதமரிடமும் பல தடவைகள் உடனடியாக மாகாண சபைத்தேர்தலை நடாத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறோம். தேர்தல்களை நடாத்துவதில் அமுல்படுத்த வேண்டிய புதிய சட்ட திருத்தத்திலேயேதான் தேர்தல் நடாத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே எதிர்வரும் ஜூன், ஜூலை மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் உத்தேசம் அரசிடம் உள்ளது.” என்றார்.