மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 9 ஆவது லீக் போட்டி இன்று மாலை 4.00 மணிக்கு ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன் அணிக்கும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையிலும் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை குவித்தது.

மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா 32 ஓட்டத்தையும், டீகொக் 60 ஓட்டத்தையும், சூரியகுமார் யாதவ் 11 ஓட்டத்தையும், யுவராஜ் சிங் 18 ஓட்டத்தையும், கிரன் பொலர்ட் 7 ஓட்டத்தையும், ஹர்த்தீக் பாண்டியா 31 ஓட்டத்தையும், குருனல் பாண்டியா 10 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், மிட்செல் மெக்லெனகான் மற்றும் மாயன்க் மார்க்கண்டே எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி, ஹார்டஸ் வில்ஜென் மற்றும் முருகன் அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஆண்ட்ரூ டை ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

177 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து மும்பை அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

பஞ்சாப் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் 40 ஓட்டத்தையும், மாயங் அகர்வால் 43 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், கே.எல்.ராகுல் 71 ஓட்டத்துடனும், டேவிட் மில்லிர் 15 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

மும்பை அணி சார்பில் பந்து வீச்சில் குருனல் பாண்டியா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

நன்றி : ஐ.பி.எல்.