வவுனியா சின்னபுதுக்குளம்  குடிமனைகளையண்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக கருங்கல் மற்றும் மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை விஷேட அதிரடிப்படையினரால்  கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொக்குவெளிய சின்னபுதுக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி நீண்ட நாட்களாக மண் அகழ்வு மேற்கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று (30) மதியம் 2 மணியளவில் களமிறங்கிய மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி மனோஹரா  தலைமையில் சென்ற விஷேட அதிரடிப்படையினர் இச் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இச் சுற்றிவளைப்பின் மூலம் அனுமதி அளிக்கப்பட்டதற்கு மேலதிகமாக சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டமை தெரியவந்ததையடுத்து  மண் அள்ளும் பெகோ வாகனம் 2 , மாமடுவ மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த 21,32 வயதுடைய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர்களையும் கைப்பற்றபட்ட வாகனத்தையும் மடுகந்தை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக மடுகந்தை விஷேட அதிரடிபடையின் நிலைய பொறுப்பதிகாரி மனோஹரா தெரிவித்தார்.