புத்தளம், தில்லையடி பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து, 660 கார்ட்டில் அடைக்கப்பட்ட 6600 ரெமடோல் போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பிலிருந்து எடுத்துச் சென்று, இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட்டோரை இலக்கு வைத்து குறித்த போதை மாத்திரைகளை சந்தேகநபர் விற்பனை செய்து வந்துள்ளார் என பொலிஸார் மேலதிக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

குறித்த  சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.