கழுத்துப்பகுதியில் ஏற்படும் ஆழமான காயங்களை, முறையாக கண்காணித்து, முழுமையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிடில், குணப்படுத்த முடியாத, நிரந்தரமான பக்கவாதம் ஏற்படக்கூடிய நிலை உருவாகும் என்று வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

வீதியில் துவிச்சக்கரவண்டியில் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, தலைக்கவசம் அணிந்து பயணித்தாலும், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. விபத்தின் போது கை நரம்பில் ஏற்படும் காயங்களை உடனடியாகவும், உறுதியாகவும், முழுமையாகவும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

அதே தருணத்தில் விபத்தின் போது கை நரம்புகளில் அடிபடுவதுபோல், கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதிகளிலும் காயங்கள் ஏற்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.

இதனை அலட்சியப்படுத்தாமல், முழுமையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும், வைத்தியர்கள் இதற்கு தகுந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தால், அதனை தவிர்க்காமல் செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஓரிரு ஆண்டுகளில் கைகளின் செயல்பாடுகளை முழுமையாக மீட்டெடுக்க இயலும். காயங்கள் தானே..! என்று உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், நிரந்தரமாக பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.