நாமும், எமது ஆயர்களும் வன்முறையாளர்களோ, வன்முறையைத் துண்டுபவர்களோ அல்ல. இதனை பக்கச்சார்பாகவும் நீதிக்கும், உண்மைக்கும் புறம்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்களையும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களையும் கத்தோலிக்க குருக்களையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தவர்களையும், அவமானப்படுத்தியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள் அளப்பரிய சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இன, மத பேதமின்றி மக்கள் நலனுக்காக பல முன்னெடுப்புக்களை உள்நாட்டிலும் , சர்வதேசத்திலும் இவர்கள் மேற்கொண்டனர். 

உணவுப் பொருட்கள், மருத்துவ வசதிகள் இன்றி அவதியுற்ற மக்களுக்கு மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் உதவியதோடு, அவர்களுக்கான பாதுகாப்பு குடியிருப்புக்களையும் அமைத்துக் கொடுத்த்தனர். 

இவ்வாறான சமூகப் பணிகளில் ஈடுபட்டதற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதோடு, ஆயுதபாணிகளால் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியிருந்தனர். மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பலர் உயிரிழந்தும் உள்ளனர் என்ற உண்மையை தமிழ் பேசும் எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

மன்னார் மாவட்டத்தில் மதகுருக்கள் ஆன்மீகப் பணிகளில் மாத்திரமல்லாமல் திருச்சபையின் கோட்பாடுகளுக்கு உட்பட்ட மக்களின் நலன் சார்ந்த சமூகப் பணிகளிலும் ஈடுபடுவது வரலாற்று உண்மையாகவும் கத்தோலிக்க மக்களின் தேவைப்பாடாகவும் காணப்படுகின்றது.

பிற மதத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கத்தோலிக்க ஆயர்களை தங்கள் தேவைகளின் போது அந்தந்த தேவைகளின் வழங்குனர்களாக அல்லது ஓர் தீர்வை முன்வைப்பவராக ஒரு மதத்தின் தலைவராக பார்க்கின்றனர்.ஆனால் கத்தோலிக்க கிறிஸ்தவராகிய நாங்கள் அவர்களை இறை அபிசேகம் செய்யப்பட்டவர்களாக கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் ஏந்தும் பாக்கியம் பெற்றவர்களாக திருப்பலியின் போதும் கிறிஸ்துவை பிரதிபலிப்பவர்களாகப் பார்க்கின்றோம். 

இலங்கை கத்தோலிக்கர்களின் யாத்திரை ஸ்தலமாகவும் மன்னார் கத்தோலிக்கர்களின் ஆன்மீக இளைப்பாற்றியின் மையமாகவும் காணப்படும் மடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாக உள்ள மாந்தை லூர்து அன்னை ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற ஓர் நிகழ்வு இந்த ஆலயத்தின் நுழைவாயிலின் அருகில் அப்பகுதி மக்களின் கலந்துரையாடலுடன் புரிந்துணர்வின் அடிப்படையில் விழாவிற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட அலங்கார வளைவை சிவராத்திரியைக் காரணம் காட்டி அதே இடத்தில் நிரந்தர அலங்கார வளைவை அகற்ற முயற்சித்ததால் அங்கிருந்த மக்களிடையே முரண்பாடு ஏற்பட்டதும் நிரந்தரமாக அமைக்கப்பட்ட அலங்கார வளைவு அகற்றப்பட்டதும் நாம் அறிந்ததே.

இந்த முறுகல் நிலையை அறிந்து நிலமையைச் சீர்படுத்த எமது கத்தோலிக்க ஆயர் சென்ற போது அங்கு ஏற்கனவே திட்டமிட்டுக் கூடியிருந்த சிலர் பக்கச்சார்பாக செயற்பட்டதுடன் கத்தோலிக்க மதகுரு ஒருவரை மையப்படுத்தி திட்டமிட்டு புகைப்படங்கள் எடுத்தும் பின்னர் அவ்விடத்தை வன்முறையின் இடமாக சித்தரித்து ஊடகங்களிலும், முகநூல்களிலும் மன்னார் மறைமாவட்ட ஆயரையும் கத்தோலிக்க சமூகத்தையும் வன்முறையாளர்களாக சித்தரித்து அவமானப்படுத்தியமை மாத்திரமல்லாமல் அவர்களை தகாத வார்த்தைகளால் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். 

நாமும், எமது ஆயர்களும் வன்முறையாளர்களோ, வன்முறையைத் தூண்டுபவர்களோ அல்ல. இதனை பக்கச்சார்பாகவும் நீதிக்கும், உண்மைக்கும் புறம்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்களையும் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மக்களையும் கத்தோலிக்க குருக்களையும் தகாத வார்த்தைகளால் விமர்சித்தவர்களையும், அவமானப்படுத்தியவர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.