மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட மறுகணமே மின்சார சபையின் ஏறாவூர் அலுவலகத்தின் தொலைபேசி அழைப்பும் துண்டிக்கப்படுகிறது என ஏறாவூர் நகரசபையின் துணைமுதல்வர் எம்.எல். றெபுபாசம் சபையில் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். 

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் மின்விநியோகம் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களில் பாவனையாளர்களுக்கு அதன் காரணத்தை அறிந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுவதில்லையென தெரிவித்துள்ளனர். 

வியாழக்கிழமை ஏறாவூர் நகரசபையின் 12 ஆவது மாதாந்த அமர்வில் சபையின் துணைமுதல்வர் சபையில் இக்குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் அடிக்கடி மின்விநியோகம் துண்டிக்கப்படுவதுண்டு. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனினும் மின்துண்டிப்பிற்கான காரணத்தையும் மீள மின்விநியோகம் வழங்கப்படும் நேரத்தையும் அறிந்துகொள்ளும் உரிமை பாவனையாளருக்கு உண்டு. 

ஆனால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட மறுகணமே  மின்சார சபையின் ஏறாவூர் அலுவலகத்தின் தொலைபேசி அழைப்பும் துண்டிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இதுதொடர்பாக கேட்கும்போது குறித்த சந்தர்ப்பத்தில் அதிக அழைப்புக்கள் வருவதனால் நெருக்கடி நிலைகாணப்படுவதாக தெரிவித்துள்ளனர். 

எனினும் இதன் உண்மை நிலையினை அறிவதற்காக மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட ஓர் இரவு  அங்கு விரைந்தபோது அங்குள்ள அலுவலர்கள் தொலைபேசி அழைப்பை செயலிழக்கச் செய்துவிட்டு உறக்கத்தில் இருந்ததை அறிய முடிந்தது என தெரிவித்துள்ளார்.