பருத்தித்துறை நகரசபையின் பொது சந்தைக்கு அருகாமையில் பலர் மரக்கறி வியாபாரம் செய்வதனால் தமக்கு நட்டம் ஏற்படுவதாகத் தெரிவித்து பொதுச் சந்தை வியாபாரிகள் தமது வியாபாரத்தை நிறுத்தி இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 

குறித்த சம்பவத்தால் நுகர்வோர் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பருத்தித்துறை நகரசபை தவிசாளர் இ.இருதயராசாவிடம் வினவிய போது, சந்தைக்கு அருகாமையில் 500 மீற்றர் தொலைவில் முதலாம் குறுக்கு தெருவில் இரண்டு பெண்கள் மட்டுமே  மரக்கறி வியாபாரம் மேற்கொள்வதாகவும், அவர்கள் இருவரும் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரமே வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் தங்களால் அதை சட்ட ரீதியாக நிறுத்த முடியாது என்றார். 

இந்நிலையில் எந்தவித இணக்கப்பாடுகளும் இன்றியே மரக்கறி வியாபார விற்பனையை நிறுத்தி இரண்டாவது நாளாக போராட்டம் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

புதன்கிழமை வரி அறவீட்டுக்கு சென்ற பருத்தித்துறை நகரசபையின் வரி அறவீட்டாளர்களிடம் மரக்கறி வியாபாரிகள்  அருகிலுள்ள மரக்கறி விற்பனையை நிறுத்தும் படியும் அவ்வாறு நிறுத்தப்படாது போனால் தம்மால் வரி செலுத்த முடியாது என தெரிவித்துள்ளனர். ஒருசில வியாபாரிகள் மட்டுமே வரி செலுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.