போதைப்பொருள் அச்சுறுத்தல் நாட்டின் எதிர்காலம் தொடர்பிலான பிரச்சினை என்பதால் விமர்சனங்களை புறந்தள்ளி அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

காலி, ரூமஸ்ஸல பொனவிஸ்டா வித்தியாலயத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற விழாவின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அன்று ஏகாதிபத்தியம் மற்றும் தீவிரவாதத்தினால் நாடு முகங்கொடுத்த அச்சுறுத்தலுக்கு நிகராக தற்போது சட்டவிரோத போதைப்பொருள் கடத்தற்காரர்களின் செயற்பாடுகளினால் நாடு அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்திருப்பது பற்றியும் ஜனாதிபதி தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட அனைவரும் உறுதிமொழி ஏற்கும் சித்திரை உறுதிமொழியானது, ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ளதுடன், அந்த உறுதிமொழியை ஏற்பதற்கும் போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்டங்களை புத்துணர்ச்சியுடன் நடைமுறைப்படுத்துவதற்கும் ஒட்டு மொத்த நாடும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காலி, ரூமஸ்ஸல பொனவிஸ்டா வித்தியாலயத்தின் 200ஆம் ஆண்டு கொண்டாட்ட விழா ஜனாதிபதியின் தலைமையில் இன்று முற்பகல் கோலாகலமாக இடம்பெற்றது. 

பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர். 

பாடசாலையின் ஸ்மார்ட் வகுப்பறைக்குச் சென்ற ஜனாதிபதி, மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

200ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் பாடசாலை வளாகத்தில் நாக மரக்கன்றொன்றையும் ஜனாதிபதி நாட்டினார்.

பாடசாலையின் பழைய மாணவர்களின் பெயரால் வழங்கப்படும் விருதுகளை மாணவ, மாணவிகளுக்கு ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

கலைக்கீர்த்தி எட்வின் ஆரியதாசவிற்கு ஜனாதிபதி நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைத்தார்.

பாடசாலையின் அதிபர் கே.கணேவத்த ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசொன்றை வழங்கி வைத்ததுடன், 200ஆம் ஆண்டு கொண்டாட்ட சஞ்சிகையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது. 

அமைச்சர் மனோ கணேஷன், தென்மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, மாகாண அமைச்சர்களான சந்திம ராசபுத்திர, விஜயபால ஹெட்டியாரச்சி ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.