பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 28 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எலின் ஆறவாது போட்டி இன்று கொல்கத்தா எடன் கார்டன் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தினேஷ் கார்த்திக் தலைமையிலான  கொல்கத்தா கிநைட் ரைடர்ஸ் அணிக்கும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையிலும் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு கொல்கத்த அணியை பணிக்க, கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 218 ஓட்டங்களை குவித்தது.

219 ஓட்டம் என்ற வெற்றியிலக்க‍ை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களும் 60 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

அதன்படி கே.எல்.ராகுல் ஒரு ஓட்டத்துடனும், கிறிஸ் கெய்ல் 20 ஓட்டத்துடனும், சப்ராஸ் கான் 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். 

இதைத் தொடர்ந்து 4 ஆவது விக்கெட்டுக்காக டேவிட் மில்லர் மற்றும் மாயங் அகர்வால் ஜோடி சேர்ந்து அதிரகாட்ட ஆரம்பித்தனர். இதனால் பஞ்சாப் அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது.

எனினும் 15 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் அகர்வால் மொத்தமாக 34 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்களாக 58 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (134 - 4).

தொடர்ந்து மண்டீப் சர்மா களமிறங்கி துடுப்பெடுத்தாட மறுமுணையில் அதிரடி காட்டி வந்த  மில்லர் 19.4 ஓவரில் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.

இறுதியாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது. ஆடுகளத்தில் மில்லர் 59 ஓட்டத்துடனும், மண்டீப் சர்மா 33 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் ரஸல் 2 விக்கெட்டுக்களையும், லொக்கி பெர்குசன் மற்றும் சாவ்லா தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்