ராணா, உத்தப்பா மற்றும் ரஸலின் அதிரடி ஆட்டத்தினால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 218 ஓட்டங்களை குவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எலின் ஆறவாது போட்டி இன்று கொல்கத்தா எடன் கார்டன் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தினேஷ் கார்த்திக் தலைமையிலான  கொல்கத்தா கிநைட் ரைடர்ஸ் அணிக்கும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையிலும் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் களத் தடுப்பை தேர்வு செய்ய கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் ஆரம்ப வீரர்களான கிறிஸ் லின் 11 ஓட்டத்தையும், சுனில் நரேன் 24 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். 

இதனால் கொல்கத்தா அணி 3.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 36 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து 3 ஆவது விக்கெட்டுக்காக உத்தப்பா, நீதிஷ் ராண ஜோடி சேர்ந்து பஞ்சாப் அணியின் பந்துகளில் வான வேடிக்கை காட்டினர்.

இதனால் கொல்கத்தா அணி 5 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 44 ஓட்டங்களையும், 10 ஓவர்களின் முடிவில் 89 ஓட்டங்களையும் 14 ஓவரின் முடிவில் 146 ஓட்டத்தையும் வேகமாக பெற்றது.

ஆடுகளத்தில் உத்தப்பா 45 ஓட்டத்துடனும், ராணா 63 ஓட்டத்துடனும் அதிரடிகாட்டி வந்தனர். எனினும் 14 ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் ராணா மொத்தமாக 34 பந்துகளை எதிர்கொண்டு 7 ஆறு ஓட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்களாக 63 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பையடுத்து ரஸல் களமிறங்க 15 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் உத்தப்பா 41 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக அரைசதம்  கடந்தார்.

இதையடுத்து உத்தப்பாவும் ரஸலும் ஆடுகளத்தில் தொடர்ந்தும் வான வேடிக்கை காட்டினர். குறிப்பாக 19 ஆவது ஓவரை எதிர்கொண்ட ரஸல் அந்த ஓவரின் 3,4,5 ஆவது பந்தில் 3 ஆறு ஓட்டங்களை தொடர்ச்சியாக விளாசித் தள்ளினார். அத்துடன் இறுதிப் பந்திலும் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசினார். இதனால் கொல்கத்தா அணி 19 ஆவது ஓவரின் நிறைவில் 210 ஓட்டங்களை பெற்றது.

இந் நிலையில் ரஸில் 19.4 ஆவது ஓவரில் ரஸல் மொத்தமாக 17 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 3 நான்கு ஓட்டம் அடங்களாக 48 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 218 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் உத்தப்பா 63 ஓட்டத்துடனும், தினேஷ் கார்த்திக் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

இதனால் பஞ்சாப் அணிக்கு வெற்றியிலக்கு 219 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி, வருண் சக்கரவர்தி,ஆண்ட்ரூ டை மற்றும் ஹார்டஸ் விலோஜென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல். இணையளத்தளம்