ராமநாதபுரம் அருகே, கடற்கரை பகுதியில் கேட்பாரற்று கிடந்த மர்மப் பொருளால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் அருகே உள்ள புதுக்குடியிருப்பு கடலோரப் பகுதியில் மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கிக் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள்  கடற்படையினருக்கு  தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, 12 அடி நீளத்தில் சுமார் 800 கிலோ எடைகொண்ட சிலிண்டர் போன்ற இரும்பு பொருள் கிடந்தது. அது, ரொக்கெட்டை இயக்கக்கூடிய எரிபொருள் சிலிண்டராக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதுகுறித்து உச்சிப்புளி விமான தள பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து அந்தப் பொருளை பார்வையிட்டனர். அத்துடன், ‘பிரமோஸ் ஏவுகணையின் ஒரு பாகமாக இருக்கலாம்’ என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த மர்மப் பொருளால், அப்பகுதி மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.