சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஓட்டங்களை 147 பெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 5 ஆவது போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்ளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானிக்க, அந்த அணியின் ஆரம்ப வீரர்களாக தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியேர் களமிறங்கி அதிரடி காட்டி டெல்லி அணி முதல் நான்கு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 35 ஓட்டங்களை குவித்தது.

எனினும் நான்காவது ஓவரின் 3 ஆவது பந்தில் பிரித்வி ஷா 24 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யருடன் தவான் கைகோர்த்தாட டெல்லி அணி 8 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்தநிலையில் 50 ஓட்டங்களை கடந்ததுடன், 10 ஓவரில் 65 ஓட்டங்களை பெற்றது.

ஆடுகளத்தில் தவான் 24 ஓட்டத்துடனும், அய்யர் 15 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தபோதும் 11.4 ஆவது ஓவரில் அய்யர் இம்ரான் தாகீரின் சுழலில் சிக்கி 18 ஓட்டத்துடன் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார் (79-2). அவரின் வெளியேற்றத்தையடுத்து ரிஷாத் பந்த் ஆடுகளம் நுழைந்தாட டெல்லி அணி 13.4 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை கடந்தது.

அத்துடன் 15 ஆவது ஓவரின் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 118 ஓட்டங்களை குவித்தது. ரிஷாத் பந்த் 25 ஓட்டத்துடனும், தவான் 46 ஓட்டத்துடனும் துடுப்பெடுதாடி வந்தனர்.

எனினும் 15 ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் ரிஷாத் பந்த் 25 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க டெல்லி அணி 120 ஓட்டங்களுக்கு மூன்றாவது விக்கெட்டை பறிகொடுத்தது. 

அவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய கொலின் இங்ரமும் அதே ஓவரின் நான்காவது பந்தில் 2 ஓட்டத்துடன் அடுத்து வந்த கீமோ பவுல் 16.3 ஆவது ஓவரில் டக்கவுட் முறையிலும் ஆட்டமிழந்தனர். இதனால் டெல்லி அணி 123 ஓட்டங்களுக்கு விக்கெட்டை இழந்தது.

கீமோ பவுலின் வெளியேற்றத்தையடுத்து ஆடுகளம் நுழைந்த அக்ஸர் படேலுடன் ‍கைகோர்த்தாட ஆரம்பித்த தவான் 16.5 ஆவது ஓவரில் 45 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 50 அரைசதம் கடந்தார்.

எனினும் அவர் 17 ஆவது ஓவரின் முதல் பந்தில் 51 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க டெல்லி அணி 127 ஓட்டத்துக்கு 6 ஆவது விக்கெட்டை இழந்தது. 

இறுதியாக டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 147 ஓட்டங்களை குவித்தது. திவாடியா 10 ஓட்டத்துடனும் அக்ஸர் படேல் 9 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்கதிருந்தனர். இதனால் சென்னை அணியின் வெற்றியிலக்காக 148 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டுக்களையும், ஜடேஜா, இம்ரான் தாகீர், சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.