ஜோஸ்பட்லரை நான் 'மன்கட்' முறையில் ஆட்டமிழக்கச் செய்ததிதல் எந்தவிதமான விதிமுறை மீறலும் இல்லை என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

அத்தோடு துடுப்பாட்ட வீரர்தான் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

12 ஆவது ஐ.பி.எல் போட்டியின் 5 ஆவது லீக் ஆட்டம்  நேற்றைய தினம் ஜெய்பூரில் இடம்பெற்றது. இப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.

இப்போட்டியில் 13 ஆவது ஓவரின் போது ராஜஸ்தான்அணித் தலைவர் ஜோஸ் பட்லரை 'மன்கட்' முறையில் ஆட்டமிழக்கச் செய்தது தற்போது சர்ச்சையாக பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

துடுப்பாட்ட வீரரான பட்லர் தனது எல்லைக் கோட்டை விட்டு வெளியே வந்தவுடன், தனது பந்துவீச்சை நிறைவு செய்யாமல் அஸ்வின் மன்கட் முறையில் ஆட்டமிழப்புச் செய்தார். ஐ.சி.சி விதிப்படி இது சரியானது என்கிறபோதிலும் கிரிக்கெட்டின் மகத்துவத்தின் படி முதலில் எச்சரிக்கை விடுத்து அதன்பின்னர் பட்லரை மன்கட் முறையில் ஆட்டமிழக்க செய்திருக்கலாம் என பலராலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

ஆனால், முதல்முறையிலேயே 'மன்கட்' முறையில் ஆட்டமிழந்ததால் பட்லருக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.

பின்னர் மூன்றாவது நடுவர் ஆட்டமிழப்பு என அறிவித்ததும் பட்லர் கடும் கோபத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

பட்லர் ஆட்டமிழந்த பின் ராஜஸ்தான் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.