12 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்று இடம்பெறவுள்ள 5 ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்தப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் ரோயல் செலேஞ்சர்ஸ் அணியை 70 ஓட்டங்களுக்குள் சுருட்டி வெற்றியை பதிவு செய்திருக்க, டெல்லி அணியும் தான் எதிர்கொண்ட முதல் போட்டியில் மும்பை அணியை சொந்த ஊரிலேயே தோற்கடித்து 37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. 

டெல்லி அணியை பொறுத்தவரையில் துடுப்பாட்டத்தில் ரிஷாப் பான்ட், காலின் இங்ராம், ஷிகர் தவான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளதுடன் வேகப்பந்து வீச்சில் இஷாந்த் ஷர்மா, ரபடா, டிரென்ட் பவுல்ட் ஆகியோர் எதிரணிக்கு சவால் விடக் கூடியவர்கள்.

எனினும் பெரோஸ்ஷா கோட்லா மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். சென்னை அணியில் சுழற்பந்து வீச்சில் கடும் சவால் அளிக்கக்கூடிய இம்ரான் தாகீர், ஹர்பஜன் சிங் மற்றும் ஜடேஜா போன்ற மூன்று சிறந்த சுழற் பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

இதற்கும் மேலாக சுரேஷ் ரய்னாவின் பந்து வீச்சு உதவியும் அணிக்கு வலு சேர்க்கும். ஆகையினால் டெல்லிக்கு சென்னை அணியின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்வது சவால் அளிக்கும்.

அதேபோல் சென்னை அணியின் துடுப்பாட்டத்திலும், ராயுடு, வோட்சன், ரய்னா, தோனி, கேதர் யாதவ் மற்றும் டூப்பிளஸ்ஸி ஆகிய அதிரடி வீரர்கள் அணியில் உள்ளதால் சென்னையின் அதிரடிக்கும் பஞ்சமிருக்காது. 

இவ் விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் சென்னை அணி 12 முறையும், டெல்லி அணி 6 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.