ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

போக்குவரத்து சேவை முன்னேற்றமடைந்தாலும் தோட்டப்புறங்களில் முறையான போக்குவரத்து சேவை இடம்பெறுவதில்லை. அதனால் பாடசாலை மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.\

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், 

நாட்டில் போக்குவரத்து சேவை முன்னேற்றமடைந்து வருகின்றது. ஆனால் மலையக பிரதேசங்களில் இன்னும் போக்குவரத்து சேவை முன்னேற்றமடையவில்லை. குறிப்பாக தோட்டப்புற பிரதேசங்களில் பாடசாலைகள் 5ஆம் தரம் வரைக்குமே இருக்கின்றன. அதன் பின்னர் நகரத்தில் இருக்கும் பாடசாலைகளுக்கே மாணவர்கள் செல்லவேண்டி இருக்கின்றது. இதனால் போக்குவரத்து சேவைகள் உரிய நேரத்தில் இடம்பெறாமையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

அத்துடன் இந்த பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கும்போது, நடவடிக்கை எடுக்கப்படுகின்றபோதும் அது சில நாட்களில் மீண்டும் இடை நிறுத்தப்படுகின்றது. தோட்டப்புறங்களில் கஷ்டப்பிரதேசங்களில்  கடந்த 10 வருடத்துக்கு முன்னர் முறையான பஸ் சேவை இடம்பெற்று வந்தது. அதன் பின்னர் கிழமையில் 3 நாட்கள் மாத்திரம் சில பிரதேசங்களில் பஸ் சேவை இடம்பெற்றுவந்தது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டிருக்கின்றது.

அத்துடன் தோட்டப்புறங்களில் பஸ்சேவை அடிக்கடி நிறுத்தப்படுவதற்கு பிரதான காரணமாக இருப்பது, போக்குவரத்து சபையில் இருக்கும் மிகவும் மோசமான பஸ்களையே அந்த பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. அதனால் குறிப்பிட்ட காலம் சேவை இடம்பெற்ற பின்னர் குறித்த பஸ் பழுதடைந்ததுடன் அங்கு போக்குவரத்து தடைப்படுகின்றது. அதனால் இதுதொடர்பில் அமைச்சர் கவனம்செலுத்தவேண்டும்.

அத்துடன் கண்டியில் உள்நாட்டு விமானசேவையை ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதன் மூலம் மக்களுக்கு போக்குவரத்தில் ஏற்படும் அசெளகரியங்களை குறைத்துக்கொள்ளலாம் என்றார்