ராஜஸ்தான் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி, கிறிஸ் கெய்லின் அதிரடியான ஆட்டத்தின் துணையுடன் 20 ஓவர்களின் நிறைவில் 184 ஓட்டங்களை குவித்துள்ளது.  

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் நான்காவது போட்டி ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு ஜெய்பூரில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் ரகானே‍ முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பஞ்சாப் அணியை பணித்தார்.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாட பஞ்சாப் அணி சார்பில் கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க, முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் நான்கு ஓட்டம் ஒன்றை விளாசித் தள்ளினார் எனினும் அடுத்த பந்தில் பட்லரின் அபார பிடியெடுப்பு காரணமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து அகர்வால் 2 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கி துடுப்பெடுத்தாடி பஞ்சாப் அணி 7.1 ஓவரில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 50 ஓட்டங்களை கடந்ததுடன் 8.5 ஆவது ஓவரில் தனது இரண்டாவது விக்கெட்டையும் பறிகொடுத்தது.

அதன்படி அகர்வால் 22 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய சப்ராஸ் கானுடன் கைகோர்த்தாடிய கிறிஸ் கெய்ல் 12 ஆவது ஓவருக்காக உனாட்கட் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரில் முதல் நான்கு பந்துகளில் மூன்று நான்கு ஓட்டங்களையும், ஒரு ஆறு ஓட்டத்தையும் விளாசித் தள்ளியதுடன் (4,4,4,6) மொத்தமாக 33 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து 13 ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளுக்கும் இரண்டு நான்கு ஓட்டங்களை சப்ராஸ் கான் விளாச பஞ்சாப் அணி 12.2 ஓவரில் 100 ஓட்டங்களை கடந்தது. 

ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் நிறைவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 125 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் கெய்ல் 65 ஓட்டத்துடனும், சப்ராஸ் கான் 26 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர். 

இதையடுத்து 16 ஆவது ஓவரை எதிர்கொண்ட கிறிஸ் கெய்ல் அந்த ஓவரின் முதலாவது பந்தில் ஒரு 6 ஓட்டத்தையும், மூன்றாவது, நான்காவது பந்தில் இரண்டு நான்கு ஓட்டங்களை விளாசித் தள்ளினார். எனினும் அந்த ஓவரின் ஐந்தாவது பந்து வீச்சில் மொத்தமாக 47 பந்துகளில் 4 ஆறு ஓட்டம், 8 நான்கு ஓட்டம் அடங்களாக 79 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணியின் மூன்றாவது விக்கெட் 144 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.

இதையடுத்து நான்காவது விக்கெட்டுக்காக சப்ராஸ் கானுடன் களமிறங்கிய நிக்கோலஸ் பூரணுடன் ஜோடி சேர்ந்தாட பஞ்சாப் அணி 16.5 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 150 ஓட்டத்தை பெற்றது. 

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும், தவால் குல்கர்னி மற்றும் கெளதம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இறுதியாக பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் சப்ராஸ் கான் 40 ஓட்டத்துடனும், மண்டீப் சர்மா 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இதனால் ராஜஸ்தான் அணியின் வெற்றியிலக்கு 185 ஓட்டமாக நிர்ணயிக்கப்பட்டது.