தல அஜித் நடிக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு ‘தல’ அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம்’ படம் வெளியானது. வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அஜித் நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையையும் விஸ்வாசம் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து அவர் ஹிந்தியில் வெளியான ‘பிங்க்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கை, தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘நேர்கொண்ட பார்வை’ என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், இப்படத்தின் வெளியீடு குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதில் வித்யா பாலன், ஸ்ரத்த ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை ஓகஸ்ட் 10 ஆம் திகதி அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளது. 

ஒரே ஆண்டில் தல அஜித் நடித்த இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனிடையே சூர்யா நடித்த ‘காப்பான்’ என்ற திரைப்படம் ஓகஸ்ட் 15 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.