(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நாரஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தில் சாதாரண மனிதன் கூட சிறிய சேவையையேனும் பணம் கொடுக்காமல் செய்துகொள்ள முடியாத நிலையே காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவுமான மஹிந்த அமரவீர இன்று சபையில் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், 

நாரஹேன்பிட்டியில் அமைந்திருக்கும் மோட்டார் வாகன பதிவு திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை. அங்கு சென்றுவரும் அனைவரும் அதிகாரிகளின் சேவை தொடர்பில் குறையே தெரிவிக்கின்றனர். சாதாரண மனிதன்கூட சிறிய சேவையையேனும் பணம் கொடுக்காமல் செய்துகொள்ள முடியாத நிலையே அங்கு இருக்கின்றது.

அத்துடன் மோட்டார் வாகன பதிவு திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் இருக்கும் இந்த தப்பான எண்ணம் இன்று நேற்று வந்ததல்ல. ஆரம்ப காலம் முதல் இருந்து வருகின்றது. என்றாலும் இந்த குற்றச்சாட்டு அரசாங்கத்துக்கும் அமைச்சருக்கும் நல்லதில்லை. அதனால் இதுதொடர்பாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கூடிய அவதானம் செலுத்தவேண்டும் என்றார்.