(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் பொருளாதார  சுமையை குறைக்கும் வகையில் தனியார் துறையுடன் இணைந்து பல வீதி அபிவிருத்து மற்றும் பொதுப்போக்குவரத்தை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

நாட்டினை அபிவிருத்தியின் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் முதலில் உறுதியான அரசாங்கம் ஒன்றும் உறுதியாக அரசியல் கொள்கை ஒன்றும், தேசிய பாதுகாப்பு, சரியான சட்டதிட்டங்கள், தேசிய ஒற்றுமை மற்றும் முதலீட்டாளர் நம்பக்கூடிய  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 

அதேபோல் பொதுப்போக்குவரத்து  சேவை சரியான வகையில் அமைய வேண்டும். நாம் மேற்கு நாடுகளின் மூலமாகவே பொதுப்போக்குவரத்தை உருவாக்கினோம். நாம் சுதந்திரம் பெற்ற காலத்தில் அன்று எமது நாட்டில் 5 ஆயிரம் வாகனங்களே இருந்தது. ஆனால் 70 ஆண்டுகளில் இன்று எமது நாட்டில் மக்கள் தொகை மூன்று மடங்கு அதிகரித்து 210 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். அதேபோல்  10 மடங்கால் வாகனங்கள்  அதிகரித்துள்ளது. இன்று நாட்டில் 7 மில்லியன் மோட்டார் வாகனங்கள் உள்ளன. 

இதுவே வாகன நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. இன்று வாகன நெரிசலால் ஒரு நாளைக்கு 10 மில்லியன் ரூபாய் வீண் விரயமாகின்றது. இது நாம் வீதி அபிவிருத்திக்கு ஒதுக்கும் நிதியை விடவும் அதிகமானதாகும் என்றார்.