தென்சென்னை லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட விரும்பிய ஒருவர், வேட்புமனு தாக்கலின்போது டெபாசிட் தொகை 25,000 ஆயிரம் ரூபாயை சில்லறையாக கொண்டுவந்த சம்பவம் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்திய லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 ரூபாயும், சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 10,000 ரூபாயும், தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும்போது முன்பணமாக (டெபாசிட்) செலுத்த வேண்டும். இதுவே, எஸ்.சி அல்லது எஸ்.டி பிரிவினர் என்றால், இந்தக் கட்டணத்தில் 50 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும்.

இந்நிலையில், சென்னை மந்தவெளியைச் சேர்ந்தவர் குப்பல்ஜி தேவதாஸ் (64). அம்மா மக்கள் தேசிய கட்சியின் நிறுவனரான இவர், தென்சென்னை லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்பினார். இதையடுத்து, சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி 13வது மண்டல அலுவலகத்திற்கு இன்று (25ம் திகதி) வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது, டெபாசிட் தொகை 25,000 ரூபாயை சில்லறை காசுகளாக எடுத்து வந்திருந்தார்.

முன்னதாக அவர், தான் கொண்டு வந்த சில்லறை காசுகளை செய்தியாளர்களிடம் காண்பித்தார். மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வந்தவர்கள் இதனை வியப்புடன் பார்த்தனர். இந்த சம்பவம், மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.