நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்று அங்கு பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு ஆயிரம் ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட அவரை  எதிர்வரும் 5 ம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று  உத்தரவிட்டார்.

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதனிடம்  சம்பவதினமான சனிக்கிழமை (23)  நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் தவணையடிப்படையில் பணம் செலுத்தும் வகையில் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்த ஒருவர் பணம் செலுத்தாத நிலையில் அந்த வாகனத்தை பறிமுதல் செய்வதற்காக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு குறித்த உத்தியோகத்தர் சென்றுள்ளார் 

இந்த நிலையில்  குறித்த வாகனத்தின் ஆவணங்கள் அடங்கிய பை ஒன்றில் ஆயிரம் ரூபா பணத்தை வைத்து முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ்  குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரியிடம் அந்த ஆவண பையிலை வழங்கினார்

இதன் போது பைலை திறந்துபார்த்த பொலிஸ் அதிகாரி அதில் ஆயிரம் ரூபா பணம் வைக்கப்பட்டு பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ள நிலையில் அவரை பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்தனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் 72 வயதுடையவர் எனவும் இவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (24); மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை  எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.