நான்கு வயது குழந்தை முதல் எழுபது வயது முதியவர் வரை தொலைபேசிகளை, அதிலும் குறிப்பாக  ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்தி வருகிறார்கள் இவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக ‘கீ’ தயாராகி இருக்கிறது என் அப்பட இயக்குநர் காலீஸ் தெரிவித்திருக்கிறார்.

“இந்தப் படத்தில்  ஸ்மார்ட் தொலைபேசி மூலம் நீங்கள் சமூக ஊடகங்களில் உங்களுக்குப் பிடித்தவற்றை லைக் செய்தால், அதன் மூலம் உங்களின் உளவியலைப் பற்றி தெரிந்து கொண்டு, உங்களைப் பின்பற்றி, உங்களுக்கே தெரியாமல், உங்களை மோசடிகளில் ஈடுபடுத்தும் கும்பலை பற்றிய படம்தான் கீ.

இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ‘இரும்புத்திரை’ என்ற படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அந்தப் படத்தில் உங்களுடைய வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை இணையத்தின் மூலமாக எப்படி உங்களுக்கு தெரியாமல் கொள்ளையடிக்கப்படகிறது என்பதை விவரித்திருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் அந்த பணத்தை விட உங்களின் உயிரும், மானமும் குறி வைக்கப்படுகிறது என்பதை விவரித்திருக்கிறோம்.

 நீங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் உங்களுக்கு பிடித்தமானவற்றை லைக் செய்தால், அதன் மூலம் உங்களின் உளவியலையும், உங்களின் விருப்பத்தையும் தெரிந்துகொண்டு, உங்களை பின்தொடர்ந்து, உங்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதற்கு ஒரு கும்பல் இயங்கி வருகிறது. அதனை பற்றியும், அதிலிருந்து உங்கள் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய படம்தான் கீ.” என்றார் அறிமுகஇயக்குநரான காலீஸ்.

ஏப்ரல் 12 ஆம் திகதி அன்று வெளியாகும் இந்த படத்தில் நடிகர் ஜீவா, நடிகை நிக்கி கல்ராணி, அனைகா சோட்டி, ஆர்.ஜே பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

விஷால் சந்திரசேகர் இசை அமைக்க, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் காலீஸ் இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் செல்வராகவனின் உதவியாளர் என்பதும், செல்வராகவனின் இயக்கத்தில் தயாராகும் படங்களின் வெளியீடுதான் தாமதம் என்றால், அவரது உதவியாளர் இயக்கும் படத்தின் வெளியீடும் தாமதம் ஆகிறதே என்பதும் குறிப்பிடத்தக்கது.