முன்னாள் சம்பியன் மும்பை அணியை வீழ்த்தி டெல்லி அணி 37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமான 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் மூன்றாவது போட்டியில் முன்னான் சம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

ஐ.பி.எல்.வரலாற்றில் இது 700 ஆவது போட்டியாகும்.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய டெல்லி அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட களமிறங்கி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 213 ஓட்டங்கள‍ை குவித்தது.

டெல்லி அணி சார்பில் பிரித்வி ஷா 7 ஓட்டத்தையும், தவான் 36 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 43 ஓட்டத்தையும், அணித் தலைவர் ஷிரியாஸ் ஐயர் 16 ஓட்டத்தையும், கொலின் இங்ரம் 37 பந்துகளில் 7 நான்கு ஓட்டம் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 47 ஓட்டத்தையும், கீமோ பவுல் 3 ஓட்டத்தையும், ஆக்ஸார் படேல் 4 ஓட்டத்தையும், பெற்று ஆட்டமிழந்ததுடன், ரிஷாத் பந்த் 27 பந்துகளில் 7 ஆறு ஓட்டம், 7 நான்கு ஓட்டம் அடங்களாக 78 ஓட்டத்துடனும், ராகுல் திவாடியா 9 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் மிட்செல் மெக்லென்னன் 3 விக்கெட்டுக்களையும், பும்ரா, பாண்டியா மற்றும் பென் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 214 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 176 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 37 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

மும்பை அணி சார்பில் ரோகித் சர்மா 14 ஓட்டத்தையும், டீகொக் 27 ஓட்டத்தையும், சூரிய குமார் யாதவ் 2 ஓட்டத்தையும், யுவராஜ் சிங் 35 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 53 ஓட்டங்களையும், கிரோன் பொலர்ட் 21 ஓட்டத்தையும், பாண்டியா டக்கவுட் முறையிலும், குருனல் பாண்டியா 15 பந்துகளில் 5 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 32 ஓட்டத்தையும், பென் கட்டிங் 3 ஓட்டத்தையும், மெக்லென்னன் 10 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், ரஸ்ஸிக் சலாம் 5 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் இஷான் சர்மா மற்றும் ரபடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், டிரெண்ட் போல்ட், ராகுல் திவாடியா, கேமோ பவுல் மற்றும் ஆக்ஸார் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்.