மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயதுடைய சிறுவன் சிகிச்சையின் போது, இரத்தம் மாற்றி ஏற்றியதால் கடந்த 19 திகதி  உயிரிழந்ததாக பெற்றோரால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியான விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி  கே. கணேசலிங்கம் தெரிவித்தார்.

இதுபற்றி சிறுவனின் பெற்றோர் மேலும் தெரிக்கையில்,

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயது சிறுவனொருவன் கடந்த 1.3.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற  வாகன விபத்தின் போது சிறிய காயங்களுடன் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மாற்றப்பட்டு அங்கு அதன் பிறகு எக்ஸ்ரோ எடுத்துவிட்டு சிறுவனுக்கு இரத்தம் ஏற்றினார்கள். 

அதன் பிறகு சலம் போகும் பகுதியால் இரத்தம் போகத் தொடங்கியதும் அங்கிருந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்யைளிக்கப்பட்டு  பின்னர் குறித்த சிறுவன் நன்றாக கதைத்துபேசி சாப்பிட்டார். மயக்கம் எதும் இல்லாது தெளிவாக இருந்தார் அதன் பிறகு 6 ஆம்திகதி வாட்டிக்கு மாற்றினார்கள்.

இதன் பின்னர்  கடந்த 9 ஆம் திகதி மீண்டும் அவர் நிலமை மோசமடைய தொடங்கியது அதனையடுத்து உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றினார்கள் அதன்போது வைத்தியர்கள் பிள்ளையின் கிட்னி பகுதியில் வாகன டயர் எறியதால் சின்ன கசிவு உள்ளதாகவும் அதனால் எந்த பாதிப்புமில்லை என்றனர்.

பின்னர் 17 ஆம் திகதி மயக்கத்தில் கை, கால் எதுவும் அசையாத நிலையில் இருந்துள்ளதையடுத்து வைத்தியரிடம் சென்று எனது பிள்ளைக்கு என்ன நடந்தது பணம் எவ்வளவு என்றாலும் தருகின்றேன் பிள்ளையைக் காப்பாற்றுமாறு அவரின்  காலில் வீழ்ந்தபோது அவர் அப்போது தெரிவித்தார் காசு பெரிதில்லை இரத்தம் பிழையான முறையில் ஏற்றப்பட்டதால் அவருக்கு பிரச்சினையாக இருக்கின்றது மன்னிக்கவும் என்றார். 

இரத்தம் மாற்றி ஏற்றியதால் தான் கிட்னி இரண்டும் பாதிக்கப்பட்டது என வைத்தியரே தெரிவித்தார். அந்த வைத்தியர் ஆரம்பத்தில் அவசர சிகிச்சை ப்பிரிவில் உள்ள அடுத்த வைத்தியரிடம்   இன்னும் ஒரு நோயாளிக்கு இரத்தத்தை ஏற்றுமாறு தெரிவித்து விட்டு அவர் சென்று விட்டார். 

இந்த நிலையில் மகனுக்கு இரத்தம் ஏற்ற வேண்டிய தேவை இல்லாத போதிலும்  அந்த பெண் வைத்தியர் வேறு நோயாளிக்கு ஏற்ற வேண்டிய இரத்தத்தை எனது மகனுக்கு ஏற்றியுள்ளார். இதனால் எனது மகனின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு  உயிரிழந்துள்ளார்.

இது எனக்கு தெரியாது இந்த நிலையில் 15 ஆம் திகதி முகநூல்களில் இரத்தம்மாற்றி 9 வயது எனது மகனுக்கு ஏற்றப்பட் செய்தி வந்துள்ளதுடன் எனக்கு இந்த பிரச்சினை 18 ஆம் திகதி தான் தெரியவந்தது இந்த நிலையில் 19 ஆம் திகதி எனது மகன் உயிரிழந்தார்.

இதனையடுத்து பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின்னர்  சட்டவைத்திய அதிகாரி இது இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதால் மரணித்துள்ளதாகவும் சில உடல் கூறுகள் பரிசோதனைக்கு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விபத்தால் மரணிக்கவில்லை என பொலிசாரிடம்  அறிக்கை  வழங்கியுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி  என்னிடம் தெரிவித்தார்.

எனது மகனில் உடலை சவப்பெட்டியுடன் அடக்கம் செய்யுமாறு பொலிசாரின் அறிவுறுத்தலுக்கமைய அடக்கம் செய்துள்ளோன். எனவே இவ்வாறு வேறு ஒரு சிறுவருக்கும் நடக்ககூடாது. அதேவேளை பயிலுனர்களாக வரும் வைத்தியர்களால் தான் இவ்வாறு இடம்பெறுகின்றது. எனவே எனது மகனுக்கு நீதிவேண்டும் பிழை செய்தோர் தண்டிக்கப்படவேண்டும்  என உயிரிழந்த சிறுவனின் தந்தை கண்ணீர்மல்க இவ்வாறு தெரிவித்தார்.  

இதேவேளை இந்த குற்றச்சாட்டு தொடர்பாக  மட்டு போதனா வைத்தயசாலை பணிப்பாளர் திருமதி  கே. கணேசலிங்கத்துடன் தொடர்பு கொண்ட போது,

கடந்த 19 திகதி போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 9 வயதுடைய சிறுவனின் சம்பவம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக அதனுடன் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் முதலில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோன்.

அவர்களிடமிருந்து கோரப்பட்ட அந்த விளக்க கடிதம் கிடைத்தவுடன் விசாரணைக்குழு அமைத்து உடன் விசாரணை செய்யப்பட்டு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். யாராக இருந்தாலும் பிழை இழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அவர் இவ்வாறு தெரிவித்தார்.