வவுனியா நகரசபையில் பொருத்தப்பட்ட 26ற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமெரா கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து இயங்கவில்லை. இதனால் நகரசபையில் இடம்பெறும் குற்றச் செயல்கள் கண்காணிக்கவும் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை என்று நகரசபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

நகரசபைக்கு கடந்த 2017 ஆம் வருடம் இறுதியில் பொருத்தப்பட்ட சி.சி.ரி கண்காணிப்புக்கமெரா  கடந்த 2018ஆம் ஆண்டு முற்றாக மாற்றப்பட்டு பெருமளவு நிதியில் 26ற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமெரா நகரசபைக்கு பொருத்தப்பட்டது எனினும் தற்போது கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து அவை அனைத்தும் செயற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் நகரசபையில் இடம்பெறும் குற்றச் செயல்கள் உட்பட அனைத்து விடயங்களும் கண்டறியப்படவில்லையென ஊழியர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு நகரசபையில் நிறுத்திவைக்கப்பட்ட ஜே.சி..பி வாகனம் திடீரென்று தீப்பற்றி எரிந்து போயுள்ளது. வேலைப்பகுதியிலுள்ள வாகனங்களுக்கு காப்பீடு செய்யப்படவில்லை. அலுவலகப்பாவனையிலுள்ள வாகனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

இருப்பினும் கடந்த 2009ஆம் ஆண்டு மெனிக்பாமில் முகாம் அமைக்கப்பட்ட போது தொண்டு நிறுவனம் ஒன்றினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட விலை உயர்ந்த ஜே.சி.பி வாகனமே எரிந்து போயுள்ளது. இச்சம்பவத்திற்கு தற்போது பல காரணங்கள் வெளிவருகின்றதுடன் இத்தீவிபத்தில் நாசகார சதிவேலைகள் இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.