(எம்.எப்.எம்.பஸீர்)

நாளாந்தம் காலை மற்றும் மாலை வேளைகளில் இரு கட்டங்களாக நான்கு  மணித்தியாலங்களுக்கு  நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 நாளாந்தம் முதல் கட்டமாக காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை அல்லது   முற்பகல் 11.30 மணி முதல்  பிற்பகல் 2.30 மணி வரை அல்லது பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான 3 மணித்தியாலங்கள் பிரதேச அடிப்படையில் மின்சார தடை அமுல் செய்யப்படவுள்ளது. 

அத்துடன் அதே போல் நாளாந்தம் இரண்டாம் கட்டமாக மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அல்லது இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, அல்லது இரவு 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி  தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மின்சாரம் தடை செய்யபப்டும் நேரம் இறுதி செய்யப்பட்டுள்ள போதும் குறித்த நேரங்களில் எந்த பகுதிகளுக்கு மின்சார தடை ஏற்படுத்தபப்டும் என்ற இருதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும்,   எந்த பிரதேசத்துக்கு எந்த நேரத்தில் மின் தடையை ஏற்படுத்துவது என்பது குறித்து இன்றைய தினம் அறிவிப்பதாகவும்  அந்த அதிகாரி மேலும் கூறினார்.

நிலவும் அதிக வெப்பத்துடனான வானிலையால் அதிகரித்த மின்சார தேவையை பூர்த்திசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மின்சார தடையை ஏற்படுத்தும் நிர்ப்பந்தம் உள்ளதாக இலங்கை  மின்சார சபை தெரிவிக்கின்றது. 

நிலவும் வரட்சியுனான வானிலையால், நாளாந்தம் பகல் வேளையில் 2,350 மெகாவோட் மின்சாரத்திற்கான கேள்வி காணப்படுகின்ற போதிலும் 1,950 மெகாவோட் மின்சாரத்தையே விநியோகிக்க முடிவதாகவும் அந்த சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், நாளாந்தம் இரவு வேளைகளில், 2,600 மெகாவோட்டிற்கும் அதிகமாக மின்சாரம் தேவைப்படுகின்ற போதிலும் 2,300 மெகாவோட்டை மாத்திரமே நாளாந்தம் விநியோகிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த வருட இறுதிப்பகுதியில் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சை தெளிவுபடுத்திய போதிலும், அதற்கான உரிய பதில் வழங்கப்படாத நிலையில், இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் அதிகாரி தெரிவித்தார்.

 இதனிடையே இந்த மின் தடையானது அடுத்து வரும் 10 நாட்கள் வரையில் அமுலில் இருக்கும் என மின்சக்தி மற்றும் புதிப்பக்கத்தக்க சக்தி வள அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரெஇவித்தார். நேற்று முன் தினம் இடம்பெற்ற நிக்ழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வெளிபப்டுத்தினார். 

இதனிடையே நாட்டில் திடீர் மின் தடையால் குடி நீர் விநியோகமும் பாதிக்கப்ப்ட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது.