(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்­டுக்குள் கடத்தி வரப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த  சுமார் 130 கோடி ரூபா பெறு­ம­தி­யான 107.22 கிலோ கிராம் நிறை  கொண்ட ஹெரோயின் போதைப்பொருள்  காலி - அக்­கு­ரல கடற்­ப­ரப்பில் வைத்து பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை, பி.என்.பீ. எனப்­படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு  மற்றும் கடற்­படை ஒன்­றி­ணைந்து  முன்­னெ­டுத்த விஷேட சுற்­றி­வ­ளைப்பில் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.  

காலி - அக்­கு­ரல கடற்­ப­ரப்பில்,  மேற்கு நோக்கி 10.5 கடல் மைல் தூரத்தில் ஈரான் ட்ரோலர் பட­கொன்­றினை சுற்­றி­வ­ளைத்து, அதிலிருந்த 9 ஈரா­னி­யர்­க­ளுடன்  இந்த போதைப் பொருள் நேற்று காலை கைப்­பற்­றப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

கடற்­படை ஊடகப் பேச்­சாளர் லெப்­டினன் கொமாண்டர் இசுறு சூரி­ய­பண்­டா­ர­வுடன்   பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில்   நேற்று மாலை விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை நடத்­தியே பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர இதனை தெரி­வித்தார்.

ஹெரோ­யி­னுடன் ஈரான் ட்ரோலர் பட­கொன்று இலங்­கையில் கைப்­பற்­றப்­ப­டு­வது இது இரண்­டா­வது சந்­தர்ப்­ப­மாகும்.  இதற்கு முன்னர் 2016 மார்ச் 31 ஆம் திகதி கடற்­ப­டை­யுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கையில் 10 ஈரா­னி­யர்கள் கைது செய்­யப்­பட்­ட­துடன்  பெரும்­தொகை போதைப் பொருளும் மீட்­கப்­பட்­டன.

நேற்று கைது செய்­யப்­பட்ட 9 ஈரா­னி­யர்கள் மற்றும் ஈரான் ட்ரோலர் படகு குறித்த சுற்­றி­வ­ளைப்­பா­னது பொலிஸ்  விஷேட அதி­ரடிப் படைக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்­றுக்கு அமைய இடம்­பெற்­றி­ருந்தது.

பொலிஸ் விஷேட அதி­ரடிப் படையின் போதைப் பொருள் மற்றும் பாதாள உலக ஒழிப்பு  குறித்த உளவுத் தகவல் மையத்தின் அதி­கா­ரி­க­ளுக்கு கிடைத்த தக­வல்­களின் பிர­காரம், நேற்­றைய சுற்­றி­வ­ளைப்பு திட்ட­மி­டப்­பட்­டது. 

பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர மற்றும் கடற்­படை பேச்­சாளர் இசுறு சூரிய பண்­டார ஆகி­யோரின் தக­வல்­க­ளுக்கு அமைய, காலி கடற்­படை முகாமில் இருந்து நேற்று முன்தினம்  இந்த சுற்றிவளைப்பு நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

பொலிஸ்  விஷேட அதி­ரடிப் படை­யி­ன­ருக்கு கிடைக்கப் பெற்ற குறித்த தகவல், அதன் கட்­டளைத் தள­ப­தியும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­மான எம்.ஆர். லதீ­புக்கு அளிக்­கப்­பட்டு அவரின் வழி நடத்­தலில் நட­வ­டிக்­கைகள் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளன.  பொலிஸ் விஷேட அதி­ரடிப் படையின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வரின் கீழான குழு­வொன்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஹிரி­யா­தெ­னி­யவின் கீழ் செயற்­படும் குழு­வொன்றும்  சிறப்பு சுற்­றி­வ­ளைப்­புக்­காக நேற்றுமுன்தினம் காலி சென்­றுள்­ளது.

அங்கு காலி கடற்­படை முகாமில்,  கடல் சார் சுற்­றி­வ­ளைப்­புக்கு பயிற்சி பெற்ற சிறப்பு கடற்­ப­டை­யுடன் கடற்­படை கப்­பலில் சுற்றி வளைப்­புக்­காக அதி­கா­ரிகள் சென்­றுள்­ளனர். இதன்­போதே  காலி அக்­கு­ரல கடற்­பரப்பில் சந்­தே­கத்­துக்கு இட­மான  ட்ரோலர் படகு கண்­கா­ணிக்­கப்­பட்­டுள்­ளன.

அப்­ப­டகை நெருங்கி அதனை சுற்றிவளைத்த கடற்­படை­யி­னரும் பொலி­ஸாரும், அப்­ப­டகிலிருந்து 4 உரப் பைகளில் கட்­டப்­பட்­டி­ருந்த 99 சிறிய பக்­கற்­றுக்­களில் பொதி செய்­யப்­பட்­டி­ருந்த ஹெரோயின் போதைப் பொருளை மீட்­டனர். இத­னை­ய­டுத்து அங்­கி­ருந்த ஒன்­பது பேரையும் கைது செய்­தனர். 

கைது செய்­யப்­பட்ட 9 பேரும் ஈரான் பிர­ஜைகள் என்­ப­துடன் அவர்கள் முதலில் தாம் மீன­வர்கள் எனவும் மீனவ நட­வ­டிக்­கை­க­ளுக்­காக கட­லுக்கு வந்­த­தா­கவும் பொலி­ஸா­ரிடம் கூறி­யுள்­ளனர். எனினும் அவர்கள் இருந்த ட்ரோலர் படகிலிருந்து மீன்பிடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­மைக்­கான எந்த தட­யங்­களும் பொலி­ஸா­ருக்கு கிடைத்­தி­ருக்­க­வில்லை. 

எனினும், 15 நாட்­க­ளுக்கு தேவை­யான உணவு மற்றும் குடிநீர் என்­பன அந்தப் படகில் இருந்து பொலி­ஸாரால் மீட்­கப்­பட்­டுள்­ளன. 

கடந்த 14 ஆம் திகதி ஈரானின் கொனாக் துறை­முகத்தில் இருந்து இந்த ட்ரோலர் படகு பய­ணித்­துள்­ளமை பொலிஸ் விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. குறித்த படகில் இருந்து 9 கைய­டக்கத் தொலை­பே­சி­களும் ஒரு செய்­மதி தொலை­பேசியும் போதைப் பொரு­ளுக்கு மேல­தி­க­மாக மீட்­கப்­பட் ­டுள்­ளது.

நேற்று முன்தினம் கட­லுக்கு சென்ற அதி­கா­ரிகள் நேற்று காலையே குறித்த ட்ரோலர் படகை கைப்­பற்றி அதிலிருந்­தோரை கைது செய்த நிலையில், நேற்று  பிற்­பகல் அவர்­களை கொழும்பு துறைமுகத்­துக்கு அழைத்து வந்­தனர். இதன்­போது கொழும்பு துறை­முகத்தில் உள்ள கடற்­படை இறங்­கு­து­றை­யான  ரங்­கல இறங்­கு­து­றையில் குறித்த படகு நங்­கூ­ர­மி­டப்­பட்ட நிலையில் சந்­தேக நபர்கள் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரி­வுக்கு அழைத்து வரப்­பட்டு ஆரம்­ப­கட்ட விசா­ர­ணைகள்  ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த போதைப் பொருள் இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதை குறித்த படகின் பயணப் பாதையை வைத்து உறுதி செய்யும் பொலிஸார்,   பட­கா­னது இலங்கை கடல் எல்­லைக்குள் கைது செய்­யப்­பட்­டுள்­ளதை சுட்­டிக்­காட்டி, இந்த போதைப் பொருளை பொறுப்­பேற்க இலங்­கையில் காத்­தி­ருந்த போதைப் பொருள் வர்த்­தகர் யார் என்­பதைக் கண்­ட­றிய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

அத்­துடன்  போதைப் பொருள் பொதி­களில் உள்ள இறப்பர் முத்திரையை மைய­ப்ப­டுத்தி இந்த போதைப் பொருள் எங்­கி­ருந்து வந்­தது, வேறு நாடு­க­ளுக்கும்  இப்­ப­டகில் போதைப் பொருள் கடத்­தப்­பட்­டதா, இறு­தி­யாக இலங்­கைக்கு வந்­ததா என்ற   விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தவும் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

எவ்­வா­றா­யினும்  இந்த போதைப் பொருள் கைப்­பற்­றப்­படும் போது, படகில் இருந்து பெரும் தொகை போதைப் பொருள் கடலில் வீசப்­பட்­ட­தாக தக­வல்கள் வெளி­யான போதும், அவ்­வா­றான எதுவும் நடக்­க­வில்லை என பொலிஸ் பேச்­சா­ளரும், கடற்­படை பேச்­சா­ளரும் உறுதி செய்­தனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­க­ரவின் தக­வல்கள் பிர­காரம்,

கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் 732 கிலோ ஹெரோயின் இலங்­கையில் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தது. எனினும் இவ்­வ­ரு­டத்தில் நேற்று வரை மட்டும்  840.55 கிலோ கிராம் ஹெரோயின் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

 

இத­னை­விட போதைப் பொரு­ளுடன் நேற்று கைது செய்­யப்­பட்ட 9 ஈரா­னி­யர்­க­ளுடன்  சேர்த்து 31 வெளி­நாட்­ட­வர்கள் போதைப்  பொருள் குற்­றங்­க­ளுக்­காக கைது  செய்­யப்­பட்­டுள்­ளனர். அதில் ஈரா­னி­யர்கள் 10 பேர் அடங்­கு­கின்­றனர். நேற்று கைதான ஒன்­பது பேருக்கு முன்னர் கடந்த  ஜன­வரி 31 ஆம் திகதி 400 கிராம் குஷ் என­ப்படும் போதைப் பொரு­ளுடன் ஈரான் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனை விட கடந்த 2018 ஆம் ஆண்டு  போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் 41 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 2016 ஆம் ஆண்டே அதிக ஈரானியர்கள் இலங்கையில் போதைப் பொருள் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தனர். அந்த ஆண்டில் 83 வெளிநாட்டவர்கள் போதைப் பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட நிலையில் அதில் 10 பேர் ஈரானியர்களாவர்.

சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் அதற்கான தடுப்புக் காவல் உத்தரவைப் பெற  கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.