(இராஜதுரை ஹஷான் )

 ஜனாதிபதிக்கும்  பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை    அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிவா விவகாரத்தில்  அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் மீதான பற்று குறைவடைந்துள்ளமையின் காரணமாக அனைத்து தரப்பினரும் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றனர்.  ஜெனிவா விவகாரத்தில்  அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும்.   

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் போட்டித்தன்மையான  உறவுநிலை காணப்படுகின்றது.இவ்வாறான  நிலைமைகள் ஒருபோதும் சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தாது.  பலவீனமான அரசாங்கம் பலவீனமான ஒரு நாட்டினை உருவாக்கும் நடைமுறையில் இந்நிலைகள் காணப்படுகின்றது.

வடக்கின் முன்னேற்றத்திற்காகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம்  என்று குறிப்பிடுவது  ஏற்றுக் கொள்ள முடியாது.

 வடக்கு மற்றும் கிழக்கிற்கு  தேசிய அரசாங்கம் எவ்வித  சுய அபிவிருத்திகளையும் முன்னெடுக்கவில்லை. 30வருட கால  பயங்கரவாத யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து   13ஆயிரம் விடுதலை புலி போராளிகளுக்கு புனருத்ததாபனம் வழங்கப்பட்டு அவர்கள் சமூதான வாழ்க்கைக்கு  கொண்டுவரப்பட்டார்கள். கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு  மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதுடன், இம்மக்களின்  தொழிற்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் சுய  கைத்தொழில்கள்  உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.