12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இன்று இரண்டாம் நாளான இரு போட்டிகள் இடம்பெறவுள்ளன. 

அதன்படி இன்று மாலை 4.00 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் இடம்பெறவுள்ள போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதவுள்ளன.

கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய முன்னாள் ஐதரபாத் அணியின் தலைவர் டேவிட் வார்னருக்கு கடந்த ஆண்டு ஐ.பி.எல். இல் விளையாட தடை விதிக்கப்பட்டது. 

சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கு மார்ச் 28 ஆ திகதி‍ வரை தடை காலம் நீடித்தாலும் கிளப் போட்டிகளில் அவர் விளையாட தகுதியானவராகவே இருக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதை காரணமாக கேன் வில்லியம்சன் இந்தப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர் இப் போட்டியில் விளையாடாது போனால் அவருக்குப் பதிலாக அணியின் உப தலைவர் புவனேஷ்வர் குமார் அணியை வழநடத்துவார். 

மறுமுணையில் கொல்கத்தா அணியானது தினேஷ் கார்த்திக் தலைமையில் களமிறங்கவுள்ளது. கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவர் கம்பீர் இந்த ஐ.பி.எல். தொடரில் உள்வாங்கப்படாமையின் காரணமாக அணியின் தலைமைப் பொறுப்பு தினேஷ் கார்த்திக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் கொல்கத்தா அணியானது சொந்த ஊரில் ஐதராபாத் அணியை சந்திக்கவுள்ளதனால் போட்டி சுவாரஷ்யமாக இருக்கும். 

இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஐதராபாத் அணி 6 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதேவேளை இன்றிரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகும் மற்றொரு போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரோயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.

இத் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி டெல்லி கெப்பிட்டல்ஸ் என்ற பெயர் மாற்றத்துடன் களமிறங்குகின்றது.

இவ் விரு அணிகளும் இதுவரை 22 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் இரு அணிகளும் தலா 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.